• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

14வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

Byவிஷா

Apr 23, 2024

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான 14 வயதுடைய சிறுமி கர்ப்பமடைந்தார். அச்சிறுமியின் கருவை கலைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக மருத்துவமனையை அணுகியபோது, சிறுமியின் வயிற்றில் கரு கிட்டத்தட்ட 30 வாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது, மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி, கருவை கலைக்கக்கூடிய கால வரம்பை கடந்துவிட்டதால் கருக்கலைப்புக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் மும்பை உயர்நீதிமன்றத்தில் சிறுமியின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஏப்.,19ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, கருவை கலைக்க முடியுமா? அவ்வாறு செய்தால் சிறுமிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என அறிக்கை அளிக்கும்படி மும்பை சியோன் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
நேற்று (ஏப்.,22) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, சிறுமியின் 30 வார கருவை கலைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ”இந்த வழக்கு விதிவிலக்கான வழக்கு என்பதால் மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில் கருக்கலைப்புக்கு அனுமதிப்பதாகவும், இதனால் சிறுமிக்கு சில ஆபத்துகள் இருந்தாலும், பிரசவ கால அபாயத்தை விட உயிருக்கு ஆபத்து அதிகமில்லை என மருத்துவ அறிக்கை தெரிவித்ததாகவும்” நீதிபதிகள் குறிப்பிட்டனர்.