தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டியை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது இரண்டு மகள்கள் உடன் ஊஞ்சாம்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருகின்றனர்.
கணவர் மதுரையில் பணிபுரிந்து வரும் நிலையில் மனைவி ஊஞ்சாம்பட்டியிலேயே பால்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 11-ம் தேதி பால் பண்ணைக்கு தம்பதியினரின் 15 வயது மூத்த மகள் சென்ற நிலையில் அங்கு வந்து மாடுகளுக்கு பால் கறக்கும் பால் கறவைக்காரர் ரமேஷ் என்ற நபர் தனியாக இருந்த 15வயது மூத்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடி வந்த சிறுமி இதுகுறித்து தனது தாயாரிடம் கூறியதையடுத்து இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பால்பண்ணையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களுடன் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து புகார் மனு விசாரணைக்காக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் கடந்த ஜூன் மாதம் நான்காம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக சிறுமி பாலியல் வன்கொடுமை சட்டத்தின்படி பாலியல் தொல்லை அளித்த பால் கறவைக்கரர் ரமேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று வரை நான்கு மாதங்களாக ரமேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்கபடவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சிறுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில் தனது கணவர் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில் தனது தோட்டத்தில் உள்ள பால்பண்ணைக்கு சென்று சிறுமிக்கு வந்து பால் எடுக்கும் பால் கறவைக்காரர் ரமேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு மட்டும் செய்து கடந்த நான்கு மாதங்களாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அடிக்கடி தங்களை காவல் நிலையம் அழைத்து பாதிக்கப்பட்ட தங்களை மட்டும் விசாரணை செய்து விட்டு அனுப்பி வைத்து அலைக்கழித்து வருவதாகவும் இதனால் தங்களது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியால்தான் தனது மகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பந்தமில்லாத சில நபர்கள் தொலைபேசி வாயிலாக ரமேஷிற்கு ஆதரவாக வழக்கை வாபஸ் பெறும்படி கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறிய சிறுமியின் தாயார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ரமேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக கொலை மிரட்டல் விடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு பிறகு பால் பண்ணை நடத்த முடியாத சூழல் நிலவியதால் அதையடுத்து பால்பண்ணையை மூடிவிட்டதால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேனி மாவட்டத்தில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.