இந்துக்கள் மங்கள நாண் என சொல்லப்படும் புனிதத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய தாலியை அணிந்து கொள்வதில் இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் முனைப்பு காட்டுகிறார்கள்.

தாலி அணிந்து கொள்வதால் வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் என்ற போதிலும் தாலி அணிவது குறித்து மதங்கள் என்ன சொல்கின்றன என்பது குறித்த விவாதங்கள் மதங்களை எல்லாம் கடந்து மதமே கூடாது என்று சொல்லக்கூடிய பகுத்தறிவுவாதிகளால் பல இடங்களிலும் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் கூடியிருந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் தமிழர் இயக்க பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன் பேசிய கருத்துகள் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூரில் உள்ள பல் நோக்கு சேவை சங்கத்தில் கத்தோலிக்க திரு அவையில் செங்கோன்மை. குற்றங்களும் தண்டனைகளும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அடிகளார் கரம்பை செபாஸ்டின் எழுதிய இந்த நூலை வெளியிட்டும் அறிமுகம் செய்தும் திராவிடர் தமிழர் இயக்கப் பேரவை தலைவர் மானமிகு சுப. வீரபாண்டியன் பேசினார். நிகழ்ச்சிகளை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவரும் தஞ்சை பல்நோக்கு சங்கத்தில் பங்குத்தந்தையுமாக இருப்பவருமான குழந்தைசாமி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பலரும் மத நம்பிக்கையில் கொண்டுள்ள ஈடுபாட்டில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி அனைவருமே சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சுப வீரபாண்டியனுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் சமய அடிப்படை வாதம் என்ற தலைப்பாகும்.
தொலைக்காட்சியை விவாதங்களிலும் பல்வேறு செய்தி ஊடகங்களிலும் தனது கருத்துகளை ஆணித்தரமாக பதிவு செய்து வரும் சுப. வீரபாண்டியன் பேசுகையில் நாங்கள் மத நம்பிக்கையில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும் மத நம்பிக்கையில் உள்ளவர்களை என்றுமே மதிக்கிறோம். மதங்கள் என்று வருகிறபோது மத நம்பிக்கை அதேபோல் மதச்சார்பின்மை என்று பார்க்கப்படுகிறது.
ஆனால் இன்னொன்று மத அடிப்படை வாதம். அதுதான் மதங்களின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களை உலகில் எல்லா நாடுகளும் மதம் சார்ந்துதான் இருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர்.
ஆனால் நமது நாடு மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாடு சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் மதச் சார்பற்ற நாடாகத்தான் வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால் இங்குதான் மதத்தின் பெயரால் பல வரலாற்று சன் சம்பவங்கள் நடந்தேறி விட்டன. இந்த நூல் வெளியீட்டு விழாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றாக கூடி இருப்பது இந்த அரங்கத்தை பெருமைப்படுத்துவதற்காக அல்ல. எதிர்காலத்தில் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காக கூடியிருக்கிறோம்.
நம்மை நோக்கி பெரிய அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் வட இந்தியாவில் தேவாலயத்திலிருந்து மக்கள் வெளியில் வரும்போது வாளையும் வேலையும் கத்திகளையும் போட்டு வைத்துவிட்டு ஜெய்ஸ்ரீராம் என அனைவரும் சொல்ல வேண்டும் இல்லையென்றால் நாங்கள் பேசமாட்டோம் இந்த ஆயுதங்கள் தான் பேசும் என்று மிரட்டி இருக்கிறார்கள். அரசு மதம் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிற நாடுகளில் கூட இது போன்ற ஒரு கொடுமை இருக்காது. ஆனால் மதத்தின் பெயரால் இங்கு இந்த அச்சுறுத்தல் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கும் நாங்களே எந்த மதச் சண்டையும் போட்டதில்லை எந்த ஒரு ஆலயத்தையும் சிலையையும் இடித்ததில்லை. யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் ஆனால் அடுத்த மதத்தை அழிக்கவும் அடுத்தவர்களை அழிக்கவோ நினைக்கக் கூடாது.
அன்புதான் உலகை ஆள வேண்டும். அன்புதான் உலகை ஆளும். மத அடிப்படை வாதத்தை விட்டு விட்டு மத நல்லிணக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
நம் நாட்டில் மத அடிப்படை வாதம் என்பது 1947 ஆம் ஆண்டு நாக்பூரில் தொடங்கிவிட்டது.

காந்தியார் கொலை முதல் காமராசர் கொலை முயற்சியில் வரை மதத்தின் பெயரால் தான் நடந்தன. எவ்வளவு பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று 1981 ஆம் ஆண்டு மே மாதம் டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு மிகப்பெரிய கட்டுரை தொகுப்பு வெளியிட்டிருந்தது. அதில் இந்த விவரங்கள் எல்லாம் இருக்கின்றன. இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்து போனவர்களை விட இரண்டு மதங்களுக்குள் ஏற்பட்ட முதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.
இங்கு அடிகளார் எழுதியிருக்கும் இந்த நூலில் கிறிஸ்தவர்கள் யாரும் தாலி அணிய கூடாது நல்ல நேரம் பார்க்கக் கூடாது என எழுதுவதற்கே ஒரு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும் என்று பேசினார்.




