• Fri. Nov 13th, 2026

உயிருடன் விளையாடும் மாணவர்கள்..,

ByKalamegam Viswanathan

Nov 13, 2026

மதுரை நகரில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் படியில் ஸ்பைடர்மேன் போன்று ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் காட்சியைக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கீழவாசலில் இருந்து சிந்தாமணி செல்லும் வழித்தடப் பேருந்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. TN 58 N 3263 என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து மற்றும் 47E வழித்தட எண் கொண்ட இந்தப் பேருந்தில், 10 அல்லது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சிலர், பேருந்தின் பின்பகுதியிலும் படியிலும் எந்தவித அச்சமும் இன்றி ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். மேலும், இவர்களின் இந்த விபரீதச் செயலைக் கண்டு சாலையில் செல்பவர்களும், உடன் பயணிக்கும் மாணவர்களும் சிரித்துக்கொண்டே செல்வது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்துத் துறையின் மௌனம்:
குறுகலான இந்தப் பாதையில் பேருந்து செல்லும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்தாலோ அல்லது அருகில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தடுப்புகளில் மோதினாலோ பெரும் விபத்து ஏற்பட்டு மாணவர்களின் உயிர் பறிபோகும் அபாயம் உள்ளது. இது குறித்து பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பது பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
இது போன்ற ஆபத்தான பயணங்களால் அந்த மாணவர்களின் குடும்பத்தினர்தான் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்க நேரிடும். எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும் எனவும், இது போன்ற அலட்சியப் போக்கில் ஈடுபடும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் மாணவர்கள் மீது போக்குவரத்துத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.