• Fri. May 3rd, 2024

உதகை நகரில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் – நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை

உதகை நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக நகர மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
பள்ளி மாணவியை துரத்தியதில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
உதகை நகராட்சி அலுவலகத்தில் இன்று சாதாரண மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி தலைமையில், துணைத் தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய 14 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜார்ஜ் உதகை நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவியை துரத்தியதில் அவர் கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்ததாகவும் அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கூறினார்.மேலும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு நகராட்சி சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டையை இதுவரை வழங்கப்படாததால் நகர மன்ற உறுப்பினர்கள் எனக் கூறி சில நபர்கள் வார்டு பகுதிகளில் சுற்றி திரிவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் உதகை நகரில் வர்த்தக சாலையான கமர்சியல் சாலையில் மழை நீர் வடிகால் கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நில அளவை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இதனைத் தொடர்ந்து உதகை நகராட்சி உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, நடைபாதை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் விசாலாட்சி விஜயகுமார், முஸ்தபா உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *