• Fri. Apr 26th, 2024

பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கற்களை வீசி தாக்குதல்

ByS.Navinsanjai

Feb 27, 2023

அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனிநபர் கட்டிடம் கட்டியதாக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்ததால் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மீது கற்களை வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்….!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் வாவிபாளையம் அருகே உள்ள முத்தூரை சேர்ந்தவர் மோகன் 38.இவர் தனது மனைவி பானுப்பிரியா மகன் ராம் விக்னேஷ் 8 ஆகியோருடன் குடியிருந்து கொண்டு தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.இவரது நிலத்தின் அருகே மாநில நெடுஞ்சாலை மற்றும் அரசுக்கு சொந்தமான நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்நிலத்தில் நடராஜ் என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி மின் இணைப்பும் பெற்று தேங்காய் களம் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயி மோகனின் உறவினரான புவனேஸ்வரன் என்பவர் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு புகார் மனு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருவாய் பொதுப்பணி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் விசாரணை நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிய வருகிறது.
இந்நிலையில் விவசாயி மோகன் தனது மனைவி,மகன் மற்றும் அவரது சித்தி கலாமணி ஆகியோர் வீட்டில் இருந்தபோது வழித்தடத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் மோகன் உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு பானுப்பிரியா மற்றும் அவருடன் இருந்த உறவினர் கலாமணி ஆகியோர் மீது கற்களை வீசி தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கலாமணி பல்லடம் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பானுப்பிரியா கூறுகையில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது குறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்ததற்கு நடராஜ் என்பவர் தூண்டுதலின் பேரில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி தங்களை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்திருப்பதாகவும் போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *