• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உத்தமபாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க நடவடிக்கை..,

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள பழமையும், ஆன்மிகச் சிறப்பும் வாய்ந்த யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கவும், கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கோவில், உத்தமபாளையம் பகுதியின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்றும், கோவிலின் தரைத்தளத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவிலின் வரலாற்றுச் சிறப்பையும், ஆன்மிக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு,

பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது:

உத்தமபாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோவில் பழமையும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட திருத்தலமாகும். இக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்றும், கோவில் தரைத்தளத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோவிலில் ராஜகோபுரம் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை அகற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவிலின் தொன்மை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் அவசியமாகும். இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தார்