இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி தினமாக கிறிஸ்தவ மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதன் படி இன்றைய புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இயேசு அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்தும் அவர் போதித்த போதனைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு சிலுவை பாதை அமைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

அதன்படி கோவையிலும் அனைத்து தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த புனித மைக்கேல் தேவாலயத்தில் சிலுவை பாதை அமைக்கும் நிகழ்ச்சி மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கோவை மறை மாவட்ட ஆயர் ஆக்குவின் இயேசு அவரது வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் குறித்தும் அவர் போதித்த போதனைகள் குறித்தும் ஒவ்வொன்றாக எடுத்துரைத்தார். இதில் சிலுவை பாதை அமைக்கப்பட்டு சிலுவை எடுத்து செல்லும் பொழுது கிறிஸ்தவர்கள் மண்டியிட்டு பிராத்தித்தனர்.





