விவசாயிகள் கறிக்கோழி பண்ணைகளை அமைத்து, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வழங்கி வரும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற அவர்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பு என்பது விவசாயிகளின் முக்கியமான சார்பு தொழிலாக இருந்து வருகிறது. கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு தேவையான குஞ்சுக் கோழிகள் மற்றும் தீவனங்களை நிறுவனங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலும், வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் வழங்கிடுவதோடு அதன் வளர்ப்புக்காக கிலோக்கு சுமார் சராசரியாக ரூ.6 என்ற அளவில் மட்டுமே தொகையை நிர்ணயம் செய்து கொடுத்து வருகின்றனர்.

இந்த தொகையை நிர்ணயிப்பதும், அதில் ஏற்படும் உயர்வு–குறைவு ஆகியவற்றை தீர்மானிப்பது முழுமையாக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால் மறுபுறம், கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்படும் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. குறிப்பாக தேங்காய் மஞ்சி தூள், கரி, தொழிலாளர்கள் கூலி, லாரி தண்ணீர் செலவு, மின் கட்டணம், பண்ணை பராமரிப்பு மற்றும் கட்டிடத்திற்கான முதலீடு என பல்வேறு செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடுமையான உழைப்பைத் தவிர வேறு எந்த லாபமும் கிடைக்காத வேதனையான நிலை தான் பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, கோழிப்பண்ணை உரிமையாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறுவனங்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டு, வளர்ப்பு கட்டணத்தை உயர்த்தி வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு நிறுவனங்கள் செய்யத் தவறும் பட்சத்தில், இந்தத் துறையில் தமிழ்நாடு அரசு தலையீடு செய்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
மேலும், பெரும் வணிகமாகவும், பொதுமக்களின் முக்கிய உணவுத் தேவையை பூர்த்தி செய்து வரும் கறிக்கோழி தொழில் எந்தவித தடையும் இன்றி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமெனில், தற்காலிக தீர்வுகளுடன் மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இந்தத் தொழில் தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் வகையில் கோழிப்பண்ணை தொழிலுக்கென தனியான ஒரு ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.




