நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்தோம். இது தொடர்பாக சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மறுசீரமைப்பு தொடர்பாக எச்சரிக்கை மணியாக சட்டப்பேரவையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் தான் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட மாநிலங்களில் எந்த விகித்தத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக் கூடாது. தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள்தொகை கட்டுபாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும் என்ற முழக்கத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்று நமது மாநில உரிமைகளை மீட்டு எடுக்கவும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெ ற்றிடவும், தமிழக எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறோம் என்று பேசினார்.