• Wed. May 1st, 2024

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர்

Byவிஷா

Apr 1, 2024

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உள்ளதாகவும், இத்தொகுதியில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 22-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதன் பின்னரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றையெல்லாம், தமிழகத் தேர்தல் ஆணையம் சரிபார்த்து, புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தது.
முன்னதாக, தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901-ஆக இருந்தது. இதில், ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 பேரும், பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 465 பேரும் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
தற்போது, வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தன்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆக உள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 8 ஆயிரத்து 467 பேரும் உள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில், 13 லட்சத்து 45 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *