விருதுநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா விழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து, விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுவர், சிறுமியர் இரவு பகலாகக் கொடி மரத்திற்குத் தண்ணீர் ஊற்றி அம்மனை குளிர்வித்து வழிபட்டனர்.

விழாவின் ஒவ்வொரு நாளிலும், அதிகாலை ஸ்ரீபராசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று பொங்கல் விழாவும் இன்று காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொதுமக்கள் பலர், தங்களின் வேண்டுதல் நிறைவேறியதற்கு தக்கவாறு உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வந்தும், மண் பொம்மைகள் வாங்கிவைத்தும் நேர்த்திக் கடன்கள் செலுத்தினர்கள்.
குழந்தை பாக்கியம் வேண்டி வரம்பெற்று குழந்தை பெற்ற பக்தர்கள் குழந்தைகளைத் தொட்டிலிட்டு அத்தொட்டிலை கழுத்தில் சுமந்த வண்ணம் கையில் அக்னிசட்டியுடன்,கரும்பு தொட்டில் கைட்டியும்,சிலர் ஆயிரங்கண் பானை மற்றும் பால்குடம் சுமந்தும் ‘ஆகோ ஐயாகோ’ என்ற பக்தி கோஷத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து, 21 சட்டி எடுத்தல், வாய்ப்பூட்டு, தொட்டில் எடுத்தல், ரதம் இழுத்தல், மாறுவேடம் பூசுதல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
பங்குனிப் பொங்கலை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.





