இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகள், காரணமாக உள்ளன. இதற்கு நான் வருந்துகிறேன். என அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசியல் நெருக்கடியால் 26 அமைச்சர்களும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். அதன்பிறகு நிதி உள்பட 4 துறைகளில் மட்டும் புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய அமைச்சரவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. இதில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்கள் மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசிய போது….
தனது அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு மோசமான நிலையில் உள்ளது . கடந்த இரண்டரை வருடங்களில் நாம் பெரிய சவால்களைச் சந்தித்துள்ளோம். கொரோனா பரவல், கடன் சுமை மற்றும் எனது அரசின் தவறுகளால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது சரிசெய்யப்பட வேண்டும். இந்த பிரச்சனைகளை தீர்க்க தீர்வு கண்டறிய வேண்டும். மேலும் மக்களின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும். .
கடன் நெருக்கடியை சமாளிக்க முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தை அணிகியிருக்க வேண்டும். மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்க வேண்டும்” என்றார்.
இலங்கை மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது தவறை ஒப்புக்கொண்டிருப்பது. இலங்கையில் அமைதிக்கும் வலிவகுக்குமா? அல்லது போராட்டங்கள் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.