• Mon. Sep 25th, 2023

இலங்கையை போல் இந்தியா மாறும் தருவாய் ஏற்படுமா..?

Byகாயத்ரி

Apr 19, 2022

நீண்ட கால நோக்கில், பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக சில இந்திய மாநிலங்கள் இலங்கையின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடாகும்.

இலங்கையின் நிலை

முதலில் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியில்தான் இலங்கை இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக, அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கவோ அல்லது தன்னுடைய ஏற்றுமதிகளைப் பல்வகைகளில் பெருக்கவோ இலங்கை தவறிவிட்டது.

இதனால் சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மற்றும் விலையுயர்ந்த குறுகிய கால வெளிநாட்டுக் கடன்கள் மூலம் இலங்கை தனது வளர்ச்சியைத் தொடர்ந்தது. இந்த நிதியானது கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு மாற்றி விடப்பட்டது. மாறாக நிதி பணப்புழக்கத்தை பராமரிப்பது மற்றும் சிறந்த நாடு தழுவிய பொருளாதாரக் கொள்கையை மேம்படுத்துதல் போன்றவற்றை இலங்கை செய்யவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 2021 க்குள், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 35 டாலர் பில்லியனைத் தொட்டது. ஆடம்பரமான வரி குறைப்பு இலங்கை அரசின் வருமானத்தை வெகுவாக குறைத்தது. இயற்கை வேளாண்மைக்கு வலுக்கட்டாயமாக மாறியது உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியது. கோவிட்-19 தொற்று தாக்கிய நேரத்தில், விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் போன்ற கூடுதலான பிரச்சனைகளைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதார நிலை ஆபத்தானதாக மாறியது. வாழவழியற்ற இலங்கை தமிழ் மக்கள் சிலர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்திறங்கினர். காரணம் இந்தியாவில் பொருளாதார நிலமை சீராக இருக்கிறது. இருப்பினும், இந்தியாவின் சில மாநிலங்கள் இலங்கை போன்றதொரு ஒரு நெருக்கடியைச் சந்திக்கலாம்.

இந்திய மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் திட்டங்கள்

ஏப்ரல் 3 அன்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் நான்கு மணிநேரம் நீடித்த சந்திப்பின் போது, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ள ஜனரஞ்சகத் திட்டங்கள் இலங்கையில் நடந்தது போல் நமது பொருளாதாரத்தையும் சிதைத்துவிடும் என்று சில அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இதை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாக வெளியிட்டுள்ளது.

முடிவில்லாத இலவசங்கள் அல்லது நலத்திட்டங்கள் இந்த மாநிலங்களின் நிதியைக் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. 2017 ஆம் ஆண்டில், மத்திய அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைக் குழு, 2022-2023க்குள் மொத்த அரசாங்கக் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% ஆகக் கொண்டுவர பரிந்துரைத்தது. அதில் ஒன்றிய அரசிற்கு 40% மற்றும் மாநிலங்களுக்கு 20% என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.இருப்பினும், குஜராத் (21.4%) மற்றும் மகாராஷ்டிரா (20.4%) ஒருபுறம் இருக்க, பெரும்பாலான மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளன. அந்த மாநிலங்களில் சில முழுமையான நெருக்கடிக்கு அருகில் உள்ளன.

நிதி நெருக்கடியில் பஞ்சாப்

உதாரணமாக, அதிக கடன்பட்ட மாநிலமான பஞ்சாபின் சில நிதி அளவுருக்கள், இலங்கையின் நிதி அளவுருக்களைப் போலவே உள்ளன. அதன் கடன் தொகை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 20% எனும் உச்சவரம்பிற்கு மாறாக, 53.3% ஆக இப்போது நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது.

எவ்வாறாயினும், புதிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வரும் தேர்தலுக்கு முன்னதாக இலவச திட்டங்கள் சிலவற்றுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை, மற்றும் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை அடக்கம். இவற்றின் செலவு ஆண்டுக்கு சுமார் 17,000 கோடி ரூபாய்.இதற்கு முரண்பாடாக, ஆட்சிக்கு வந்த பிறகு, ஆம் ஆத்மியின் முதலமைச்சர் மான் மத்திய அரசிடம் ரூ.1 லட்சம் கோடி நிவாரண நிதியை கோரினார்.

ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்கள் 2021-22 இல் ஒப்பீட்டளவில் அதிக நிதிப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தன. இது அவர்களின் ஒட்டுமொத்த வருடாந்திர கடன் தேவைகள் அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு அறிவார்ந்த தீர்வுகள் கண்டுபிடிக்கப் படவேண்டும். ஏனெனில் மாநிலங்கள் என்பது தனித்து இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்.

இவ்வாறாக மாநில அரசுகள் சமூக நலத்திட்டங்களுக்குச் செலவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது அவற்றின் வரி வருவாய் குறைந்து, ஒன்றிய அரசின் வரி பாக்கி அதிகரித்து வருகிறது. இந்நிலைமை தொடருமானால் இலங்கை போன்றதொரு நிலை இங்கு வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *