புதுச்சேரி ராஜ்நிவாசில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை முழுநிலவு விருந்து முதல் முறையாக கவர்னர் தமிழிசையை அழைத்தார். அதில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்தை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. புதுச்சேரியில் கவர்னர் தமிழிசைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக கவர்னர் தமிழிசை சூப்பர் முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்று கூறினார்.
இது குறித்து பேசிய கவர்னர் தமிழிசை, இந்த வார்த்தையை எதற்காக முத்தரசன் சொன்னார் என்று அவருக்கு தான் தெரியும். தமிழகத்தில் இருக்கக்கூடிய அவர் புதுச்சேரிக்கு வந்து என்னை சூப்பர் முதல்வர் என்று சொல்லியுள்ளார். நான் சூப்பராக செயல்படுகிறேன். ஆனால் சூப்பர் முதல்வர் இல்லை. இதனை மக்களே சொல்கின்றனர்.பாஜக தலைவர்கள் யாரையும் சந்தித்து நான் கட்சியை வளர்க்கவில்லை. எனது வேலையை மட்டும்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு திறமை இல்லை எனக் கூறினால் அவரிடம் விவாதிக்க வருகிறேன். இரு மாநிலத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் பார்த்துக் கொண்டு உள்ளேன். புதுச்சேரிக்கு வரும்போது ஏதாவது சொல்ல வேண்டும் என சொல்கிறார்கள்.
தமிழிசை இருக்கிறார், வாய்க்கு அளவாக மெல்லுவோம் என்று நினைக்கின்றனர். தமிழிசை மென்மையானவள் தான். ஆனால் நான் ஒரு இரும்பு பெண்மணி, என்னை யாரும் வாயில் போட்டு மெல்ல முடியாது. அதிகாரத்தை நான் கையில் எடுத்துள்ளதாக சிலர் போராடுகிறார்கள். எந்த விதத்திலும் நான் அதிகாரத்தை பயன்படுத்தியது இல்லை. முதல்வரிடமே அதை நீங்கள் கேட்கலாம் என்று கூறினார்.