• Fri. May 3rd, 2024

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்..!

Byவிஷா

Aug 22, 2023

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் 7 மீனவர்கள் காயமடைந்தனர்.
வழக்கம்போல விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுத்துறை சேர்ந்த பாஸ்கர், செந்தில் அரசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் பைபர் படகு ஆகியவற்றில் அருள்ராஜ், செல்வமணி, தினேஷ், வினோத், மருது ஆகிய ஏழு மீனவர்கள் தென்கிழக்கு சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூன்று பைபர் படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தி, கம்பி மற்றும் கட்டைகளுடன் மீனவர்களின் படகுகளில் ஏறி 800 கிலோ மீன் பிடி வலை, இரண்டு செல்போன், திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தமிழக மீனவர் பாஸ்கர் என்பவர் தலையில் கொள்ளையர்கள் கம்பியால் தாக்கியதில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அருள்ராஜை கத்தியால் வெட்டியதில் கையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள், அவசர அவசரமாக ஆற்காட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பினர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் அருள்ராஜ், பாஸ்கர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *