உழைப்பாளர்கள் தினமான மே1 ஆம் முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டத்தில் 10 தூய்மை காவலர்கள், 6 தூய்மை பணியாளர்கள், 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்களின் சேவைகளை பாராட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் கதர் ஆடைகளை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கினார்.
எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் கலந்து கொண்டு பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றினை அடிப்படையாக கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் குறித்தும், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தேசிய ஊராட்சிகள் தின முக்கியத்துவம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், தொழிலாளர் துறை, தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், பண்னை மட்டும் பண்ணைச்சாரா வாழ்வாதாரம் நடவடிக்கைகள், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கலந்துரையாடி, திட்டத்தின் பயன்கள் மற்றும் பொதுமக்கள் இந்த திட்டங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சியின் வரவு செலவுகள் கூட்டத்தின் பொருண்மைகள் ஊராட்சி செயலரால் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் இதர வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

பின்னர், பொதுமக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். கிராம சபைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் 10 தூய்மை காவலர்கள், 6 தூய்மை பணியாளர்கள், 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்களின் சேவைகளை பாராட்டி கதர் ஆடைகளை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) செல்வம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே.) பொ.ராணி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அசோக்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சு.செல்வபிரியா, தூய்மை பாரத இயக்க திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், இமயவர்மன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
