பெரம்பலூர் மாவட்டம் கிராம அளவில் நடைபெற உள்ள நில உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்பேசி கொண்டு வந்து தங்களின் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது..,
விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் ஒன்றிய அரசு வேளாண் அடுக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம், நில உடைமை வாரியாக புவியிடை குறியீடு செய்த பதிவு விவரம், நில உடைமை வாரியாக பயிர் செய்த விவரம் ஆகிய 3 விவரங்களும் முக்கியமானவை ஆகும். இதில் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் (Farmers Registry) திட்டமானது ஒன்றிய வேளாண்மை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறி முறையின் படி, தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்னணு முறையில், அனைத்து விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாளஎண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்துத்துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம். ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அரசு திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிபடுத்த முடியும். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்டங்கள் பெற்றுக் கொள்ள முடியும். பிரதமரின் கௌரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.
இப்பணியை மேற்கொள்ள பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் கிராம அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட சமுதாய பண்ணை மகளிரும் வருகை தந்து விவசாயிகளின் தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர். எனவே, விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்பேசி கொண்டு வந்து தங்களின் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.