• Sat. Nov 7th, 2026

படத்தின் பெயரையும் படத்தைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கிருஷ்ணசாமி எச்சரிக்கை..!

BySeenu

Nov 7, 2026

நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கு மீண்டும் ‘சண்டியர்’ எனப் பெயர் சூட்டியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அந்தப் படத்தைத் தொடங்கவோ, தமிழகத்தில் வெளியிடவோ அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தீபாவளியை மது இல்லாமல், பட்டாசு புகையைக் குறைத்து அனைவரும் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கமல்ஹாசனின் புதிய திரைப்படம் குறித்து பேசிய அவர், கடந்த 2002-ஆம் ஆண்டு இதே ‘சண்டியர்’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டபோது தென் தமிழகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், அப்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் அளித்ததையடுத்து படத்தின் பெயர் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரைப் பயன்படுத்துவது சமூகத்தில் சாதி ரீதியான மோதல்களை உருவாக்கும் வகையில் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். நடிகராக இருந்த கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பதால் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒருவர், சாதி மோதல்களைத் தூண்டும் வகையிலான பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்தார்.

இந்தத் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும், தயாரிப்பாளர் சங்கத்தைச் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார். மேலும், இந்தப் பெயரில் திரைப்படத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம்; படப்பிடிப்பு நடத்தவும், திரைப்படம் வெளியிடவும் எதிர்ப்பு தெரிவிப்போம் எனக் கடுமையாக எச்சரித்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து எடுத்தால் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கிருஷ்ணசாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.