அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது
இந்த சம்பவத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் நடிகர் விஜய் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பசுமை தாயகம் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி தலைமையில் போலீஸாரின் தடையை மீறி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், பெண்களுக்கு நீதி வழங்கக்கோரியும் சௌமியா அன்புமணி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.