• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கடந்த ஆண்டை விட தெற்கு ரயில்வேயில் 5 சதவீதம் வருவாய் அதிகரிப்பு

ByP.Kavitha Kumar

Jan 27, 2025

நடப்பு நிதியாண்டில், 9,170 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட, ஐந்து சதவீதம் அதிகம் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், குடியரசு தினவிழாவில் அவர் பேசுகையில், தெற்கு ரயில்வே வருவாய் உயர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், இதுவரை 9,170 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட ஐந்து சதவீதம் அதிகமாகும். தெற்கு ரயில்வேயில்தான், 91.1 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, 52.80 கோடி பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டில், 54.50 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். பல ஆண்டுகள், ரயில் இயக்கங்களின் பாதுகாப்பை மேம்படுத்த, நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், மக்களின் போக்குவரத்தை பூர்த்தி செய்யவும் வகையில், 2,329 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டை விட 2.8 மடங்கு அதிகம்.

தெற்கு ரயில்வேயில் 11 ரயில் ஜோடிகளில், எல்எச்பி பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் மூன்று ஜோடி ரயில்களில் இந்த வசதி மேம்படுத்தப்படும். முக்கியமான ரயில் நிலையங்களை, உலக தரத்துக்கு உயர்த்தும் வகையில், 13 ரயில் நிலையங்களில் பணிகள் நடக்கின்றன. கன்னியாகுமரி – நாகர்கோவில் டவுன் தடத்தில், இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால், சென்னை எழும்பூர் — நாகர்கோவில் சந்திப்பு இடையிலான பாதை, இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.