

சேலத்தில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி துணை மேயர் பரிசு வழங்கினார்.
சேலம் பழைய சூரமங்கலம் அருகே உள்ள வள்ளலார் மைதானத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி ராகுல் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் தென்னிந்திய அளவில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு கேரளா கர்நாடகா மாநிலங்களிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தையும் ஆண்கள் பிரிவில் கேரள அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் விஜயலட்சுமணன் ஆகியோர் பரிசுகள் மற்றும் சுழற்கோப்பை வழங்கினர்.
மேலும் ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விழா மேடையில் கேக் வெட்டி விளையாட்டு வீரர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மாநில ஆராய்ச்சி குழு தலைவர் மாணிக்கவாசகம் பொதுக்குழு உறுப்பினர்கள் உடையாபட்டி பிரகாசம், தனசேகர் தொழிலதிபர்கள் செங்கை சத்யா, புழல் குபேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

