விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அணையினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார் கலைவாணி, சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் ஆகியோர் வரவேற்றனர்.

வெம்பக்கோட்டை அணையினை சுற்றி பார்வையிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு வைப்பாறு வடிநில செயற்பொறியாளர் மலர்விழி ,உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் கண்ணன், ஆகியோரிடம் அணையின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து வெம்பக்கோட்டை அணையின் நீரை பயன்படுத்தி பாசனம் பெறும் கிராமங்கள் குறித்தும், அணை நிரம்பி திறக்கும் சமயத்தில் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதா எனவும், வெள்ளப்பெருக்கினால் கிராமங்கள் ஏதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா . தொடர்ந்து வைப்பற்றுக்கு நீர் வரத்து குறித்து கேட்டார்.அப்போது அதிகாரிகள் அணைக்கு சீவலப்பேரி ஆறு மற்றும் காயல்குடி ஆறு ஆகியவற்றிலிருந்து தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சீவலப்பேரி ஆற்றில் இருந்து அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என கூறினார்கள்.

தொடர்ந்து வெம்பக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) ஜெயபாண்டியன், (கிழக்கு) கிருஷ்ணகுமார், ஆகியோர் இறவார்பட்டியில் இருந்து அச்சங்குளம் செல்லும் தரைப்பாலம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ள பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது வரை சீரமைக்கப்படாததால் நாற்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் தங்கம் தென்னரசு கிராம மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.