குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி நிலையம். நீர் பிடிப்பு பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் குளத்தில் நீர் தேக்கி வைக்க முடியாத நிலையால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேனி மாவடம் பெரியகுளம் அருகே உள்ள அ.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் பகுதியில் உள்ள வேலாயுத குளம் 20 க்கும் மேற்பட்ட ஏக்கர் நீர் பிடிப்பு பரப்பளவை கொண்டது. இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படுகின்ற நீரானது, அந்த பகுதியை சுற்றி உள்ள 1000 திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின், நிலத்தடி நீர் மட்டம் உயர்வுக்கு பயன்பட்டு வந்தன.
தற்பொழுது குளத்தில் நீர் தேக்கிவைக்க முடியாத நிலையால் அந்த பகுதியில் உள்ள 1000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசு நீர் நிலைகளை ஆக்கிரமித்து செயல்படுத்தபட்டுள்ள சூரிய மின்சக்தி திட்டத்தை தடுத்து நிறுத்தி நீர் நிலைகளை பாதுகாத்து விவசாயிகளின் நீராதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு வேலாயுதபுரம் பகுதியில் மத்திய அரசின் சார்பில் என் எச்.பி.சி. என்ற நிறுவனம் சோலார் முலம் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ், 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய தனியார் நிலத்தை பெற்றது. இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த வேலாயுத குளத்தின் நீர் பிடிப்பு பகுதியையும் ஆக்கிரமித்து, சூரிய மின் உற்பத்தி செய்ய சோலார் தகடுகளை நீர் பிடிப்பு பகுதிகளில் அமைத்துள்ளனர். இதற்கு அந்த பகுதி விவசாயிகள் மற்றும் வேலாயுதபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்ட காலத்தில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் பல முறை குளத்தின் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து சோலார் மின் உற்பத்தி நிறுவனம் கட்டுமான பணிகளை செய்துவருவதை தடுத்து நிறுத்த புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.