தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்ட வருகிறது. பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகம் முன்பு மேடை அமைத்து பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அங்குள்ள பெரியாரின் சிலைக்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் உட்பட பல்வேறு பெரியாரிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் தொடர்ந்து வருகை புரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் சமூக நீதி நாள் உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், தந்தை பெரியார் பல்வேறு பேதங்கள் இல்லாமல் சமூகத்தில் அனைவரும் சமம் என்று வாழ்நாள் முழுவதும் வாழ்ந்ததாக தெரிவித்தார். மேலும் அந்த கொள்கைக்காகவும் பாடுபட்டதாக கூறினார்.
மனித சமூகம் உள்ளவரை பெரியாரை மனிதர்கள் நேசிப்பார்கள் எனவும் பேதமில்லா சமூகத்தை உருவாக்குவோம் என்று உறுதி ஏற்போம் எனவும் தெரிவித்தார். தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக முதலமைச்சர் அறிவித்தது பெரியாருக்கு அளிக்கப்பட்ட ஒரு அடையாளம் என தெரிவித்தார்.
