புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 75 ஆயிரம் பயனாளிகள் பயன்படுகின்றனர். இதில் காரைக்காலில் 14,000 பேர் பயன்பெறுகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டில் சுமார் 11.5 லட்சம் மனித நாட்கள் வேலை நடைபெற்றதாகவும் இதில் 7.5 லட்சம் மனித நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள நான்கு லட்சம் மனித நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாமல் கடந்த மூன்று மாத காலங்களாக காலம் தாழ்த்தி வந்த நிலையில், 100 நாள் வேலை செய்த பயனாளிகளுடன் காங்கிரஸ் கட்சியினர் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மாவட்ட தலைவர் சந்திரமோகன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மலா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது சாலை மறியல் போராட்டத்தினால் வேளாங்கண்ணி சென்னை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.