சென்னை விமான நிலையத்தில், பயணிகள் ஓய்வறையில், பயணிகள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள வார இதழ்களில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழி இதழ்கள் இல்லாமல், இந்தி மொழி இதழ்கள், நூல்கள் மட்டுமே வைக்கப்பட்டு, ஒன்றிய அரசு மறைமுகமாக இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக, திமுக ராஜ்யசபா எம்பி, சென்னை விமான நிலைய டூவிட்டரில் பகிங்கர குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்.
அனைத்து மொழிகளையும் ஒன்றாகவே கருதுகிறோம். தமிழ் இதழ்களை பயணிகள், விமானத்திற்குள் வைத்து படிப்பதற்கு, கைகளில் எடுத்து சென்று விட்டதால், தமிழ் இதழ்கள் இல்லாமல், இந்தி இதழ்கள் மட்டுமே இருந்துள்ளன என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் மழுப்பலான பதில்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்யசபா திமுக எம்பி வில்சன், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 4ல் உள்ள பயணிகள் ஓய்வு அறையில் சென்று அமர்ந்துள்ளார். அப்போது அவர் அங்குள்ள வார இதழ்களை எடுத்து படிக்க விரும்பி உள்ளார். ஆனால் அந்த டெர்மினல் 4, பயணிகள் ஓய்வு அறையில் வைக்கப்பட்டிருந்த வார இதழ்களில், இந்தி மொழியிலான இதழ்கள் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. தமிழ் இதழ்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதை அடுத்து ஆத்திரமடைந்த ராஜ்யசபா எம்பி வில்சன், சென்னை விமான நிலைய டூவிட்டர் பக்கத்தில், இது குறித்து, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டூவிட்டர் பக்கத்தில், சென்னை விமான நிலையத்தில், நான் இதழ்களை படிக்க எடுத்தபோது இந்தி நூல்கள் மட்டுமே இருக்கிறது. இது டெல்லி விமான நிலையம் அல்ல. சென்னை விமான நிலையம். சென்னை விமான நிலையத்தில் தமிழ் உள்ளிட்ட, மாநில மொழி நூல்களுக்கு இடம் இல்லை. ஆனால் இந்தி மொழி நூல்களை அதிக அளவில் வைத்துள்ளனர். இது தமிழ்நாட்டு மக்களின் மொழி உணர்வை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு கடுமையாக கண்டித்து குறிப்பிட்டதோடு, ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்நாத் நாயுடுக்கும் அந்த தகவலை அனுப்பி உள்ளார்.
எம்பி வில்சன் தனது டூவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஒன்றிய அரசு இதைப்போல், வலுக் கட்டாயமாக, இந்தியை திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வறையில், மாநில மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இந்தியை திணிக்கும் விதத்தில் இந்தி மொழி நூல்களை அதிகம் வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது மட்டுமின்றி விமான நிலையத்திற்குள் பயணிகள் காண அறிவிப்பு டிஜிட்டல் போர்டுகள் பலவற்றில், இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மாநில மொழியான தமிழ் இடம் பெறவில்லை. அதைப்போல் விமானத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவிப்புகள் உட்பட, எந்த அறிவிப்புகளும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் அறிவிக்காமல், இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்பதும் இந்தியாவில் உள்ள விமானங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இது சரியானது இல்லை. தமிழ் மொழி மிகவும் தொன்மையான பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மொழி. அந்த தமிழ் மொழியை, இதை போல் இந்திய விமான நிலைய ஆணையம் புறக்கணிப்பது சரியானது இல்லை. இவ்வாறு கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே சென்னை விமான நிலைய அதிகாரிகள் டூவிட்டர் மூலம் இதற்கு அளித்த பதிலில், நாங்கள் மொழி வேறுபாடு எதுவும் பார்க்கவில்லை. அனைத்து மொழிகளையும் ஒன்றாகவே கருதுகிறோம். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி பத்திரிகைகள், வார இதழ்கள் போன்றவைகளை வைத்திருக்கிறோம். நீங்கள் வந்து பார்க்கும் போது, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி பத்திரிகைகள் வார நூல்களை, மற்ற பயணிகள், விமானத்திற்குள் வைத்து படிப்பதற்காக, கையில் எடுத்து சென்றிருக்கலாம். எனவே நீங்கள் பார்க்கும் போது இந்தி மொழி இதழ்கள் மட்டுமே இருந்துள்ளதால், நீங்கள் இந்த பதிவை போட்டு இருக்கலாம். நாங்கள் அனைத்து மொழிகளையும் ஒன்றாகவே பார்க்கிறோம். தனிப்பட்ட விதத்தில் எந்த மொழிக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது என்று கூறியுள்ளனர். அதோடு தமிழ், ஆங்கில பத்திரிகைகள் இருப்பது போன்ற புகைப்படங்களையும் டூவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
ஆனாலும் சென்னை விமான நிலையத்தில், தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி நூல்கள், குறைக்கப்பட்டு,இந்தி இதழ்கள் நூல்கள் அதிகமாக வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ராஜ்யசபா உறுப்பினர் ஒருவர், பகிரங்க குற்றச்சாட்டு எழுப்பி உள்ளது, சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.