அரசு அதிகாரிகளுக்கெதிராக லஞ்ச ஒழிப்பு சட்டம் இருப்பது போல, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகக் குறைதீர்க்கும் அதிகாரி (அ) புகார் தீர்ப்பாளர் (Ombudsman) அமைப்பு இருப்பது போன்று காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் சித்திரவதை குறித்த முறையீடுகளை விசாரிப்பதற்கென்று தனியான/காவல்துறை சாராத விசாரணை முகமை மற்றும் நீதிவழங்கும் அமைப்புகள் தேவை என காவல்துறை வன்முறைக்கு எதிரான மக்கள் கூட்டியக்கம் முதல்வரை வலியுறுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித் குமார் நகை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தனிப்படை காவலர்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அண்மையில் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காவல்துறை வன்முறைக்கு எதிரான மக்கள் கூட்டு இயக்கம் என்ற அமைப்பின் சார்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மக்கள் சிவில் உரிமை கழக மாநில தலைவர் பேராசிரியர் முரளி பேசினார். அப்போது அவர்,

கடந்த ஜூன் 28ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்ட வழக்கு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அது குறித்து பல்வேறு அமைப்புகள், மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கலைஞர்கள் கொண்ட எங்கள் கூட்டியக்கம் எங்கள் கருத்துகளையும் வேண்டுகோள்களையும் தங்கள் முன் வைக்கின்றோம்
காவல்துறையின் வன்முறை என்பதும், விசாரணையின் போது நடக்கின்ற சித்திரவதைகளையும் சட்ட விரோதமானது என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறி வந்த போதிலும் காவல்துறையின் கீழ்மட்டத்திலுள்ள காவலர்களிலிருந்து உயரதிகாரிகள் வரை சீருடை அணிந்து ஆயுதம் ஏந்தியிருப்பதே. வன்முறை பிரயோகத்திற்குத்தான் என்றும் சித்திரவதைக்குள்ளாக்காமல் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமிருந்தும். சந்தேகத்திற்குரியவர்களிடமிருந்தும் உண்மையை வரவழைக்க முடியாது. என்கிற ஆழமான நம்பிக்கை இரத்தத்தோடு ஊறியதாக இருக்கின்றது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 31 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக “மக்கள் கண்காணிப்பகம்” எனும் மனித உரிமை அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகின்றது ஏறத்தாழ எட்டு கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் மிகக்குறைந்த சதவீதம் என்று இதனை ஒதுக்கிட முடியாது சமீப காலமாக விசாரணைக் கைதிகளின் கைகால்களை உடைத்து மாவுக்கட்டுப் போட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல் என்பது இயல்பான நடைமுறையாக மாறியிருக்கின்றது. அவ்வப்போது நிகழ்கின்ற காவல் மரணங்கள் அனைத்து காவல்நிலையங்களிலும் சித்திரவதை என்பது விசாரணையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது என்பதையே காட்டுகிறது
சித்திரவதை என்றால் என்னவென்று இந்தியச் சட்டங்களில் விளக்கப்படவில்லை. அதனால் அப்படி ஒன்று இல்லையென்றோ, சட்டத்தால் தண்டிக்க முடியாதென்றோ கூறிவிடமுடியாது கடந்த 1984ஆம் ஆண்டு ஐ.நா.சபையால் நிறைவேற்றப்பட்ட சித்திரவதைக்கெதிரான உடன்படிக்கை ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற அல்லது தண்டிக்க அல்லது அச்சுறுத்த ஓர் அரசு அதிகாரியின் தூண்டுதலால் அல்லது ஒப்புதலின் பெயரால் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக வலியை ஏற்படுத்துவது சித்திரவதை” என்கிறது. இந்த ஆவணம் திட்டமிட்ட மனித்தன்மையற்ற இழிவான முறையில் நடத்துவதையும் ஒரு வகை தண்டனைதான் என்கின்றது”
மேற்கூறிய சித்திரவதைக்கு எதிரான ஐ.நா.வின் உடன்படிக்கையில் இந்தியா ஒப்பமிட்டுள்ள போதிலும் அதனை ஏற்புறுதி (Ratification) செய்யவில்லை அதனால் சித்திரவதை என்பது இந்தியச் சட்டங்களில் விளக்கப்படாததோடு அது ஒரு தண்டனைக்குரிய குற்றமென்று இந்தியாவின் தண்டனைச் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவிலும் (BNS) குறிப்பிடப்படவில்லை. தனியான சட்டங்களும் இயற்றப்படவில்லை. ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறவோ, பொருளைத் திரும்பப்பெறுவதற்கோ சட்ட விரோதமாக அடைத்து வைப்பது மூன்றாண்டு சிறைத்தண்டனைக்குரிய குற்றம் என புதிய BNS பிரிவு 125(8) கூறுகின்றது எனினும் சித்திரவதை, காவலில் மரணம், கொலை போன்ற குற்றங்களைக் கையாளுவதற்கு இப்பிரிவு மட்டும் போதுமானதல்ல தனியானதொரு சட்டம் அவசியமாகின்றது
சித்திரவதை, காவலில் மரணம், கொலை போன்ற குற்றங்களைக் கையாளுவதற்குத் தனியானதொரு சட்டம் இயற்றுதல்; முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்வதற்கான காவலர்கள் அல்லாத தனி அமைப்பு தேவை அரசு வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுப்பது போல, சட்டம் பயின்றவர்களை அதற்காக நியமிக்கலாம்;
காவல்துறை வன்முறை நிகழ்வுகளில் அப்பகுதி உயர் அதிகாரிகளும் அந்நிகழ்வுக்கு பெறுப்பேற்கும் வகையில் (Command Responsibility) வழக்குகள் பதிவு செய்வது அவசியம்;
அரசு அதிகாரிகளுக்கெதிராக லஞ்ச ஒழிப்பு சட்டம் இருப்பது போல, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகக் குறைதீர்க்கும் அதிகாரி (அ) புகார் தீர்ப்பாளர் (Ombudsman) அமைப்பு இருப்பது போன்று காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் சித்திரவதைக் குறித்த முறையீடுகளை விசாரிப்பதற்கென்று தனியான/காவல்துறை சாராத விசாரணை முகமை மற்றும் நீதிவழங்கும் அமைப்புகள் தேவை; சித்ரவதைகளை பயன்படுத்தும் காவலர்களின் பணிப் பதிவேட்டில் அதை பதிய வேண்டும் அவரின் பணி உயர்வுக்கு முன் இவைகள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்;
காவல்நிலையத்தில் சி.சி.டி.வி கேமரா அவசியம் இருக்க வேண்டும் அவ்வாறு தாக்கல் செய்யாத போது காவல் துறை மீது எதிராக ஊகம் கொள்ள வழி வகை தேவை; சித்ரவதையை தொடர்ந்து நிகழ்த்தும் காவலர்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுப்பதுடன் அவர்கள் கட்டாயம் உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; சித்ரவதை தொடர்பாக வரும் புகார்களை வெளிப்படை தன்மையுடன் உடனடியாக விசாரணை நடத்த சுதந்திரமான நிபுணர்கள் குழு அமைக்கப்படவேண்டும்; மேலும் அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ விசாரித்து நடவடிக்கை எடுத்துவிடும் என்று இருந்துவிடாமல் நமது தரப்பில் நடந்துள்ள தவறுகள் என்னவென்று அறியும் முயற்சியும் தமிழக அரசின் தரப்பில் (Internal enquiry) தேவை என்று கருதுகிறோம்;
ஒய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான ஐந்தாவது போலீஸ் ஆணையம் மூன்றாண்டு விசாரணைக்குப் பிறகு நீண்டகால மாற்றங்களுக்கான பரிந்துரைகளை அளித்துள்ளது. காவலில் நடக்கும் மரணங்களைப்பற்றி கூறுகையில் காவலர்களின் மன அழுத்தம் வாழ்முறை சார்நோய்கள் காரணமாகின்றன என்றும், பொதுவான பிரச்சனைகளைக் கண்டறிய காவல்துறையின் பலமட்டங்களிலும் கலந்துரையாடல்கள் தேவை என்கிறது எனினும் இது குறித்து நடைமுறை யதார்த்தத்தில் கண்டு உணரத்தக்க மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை.
நீதிபதி சி டி செல்வம் பரிந்துரைகளைப் பொது வெளியில் பரவலாக்க வேண்டும் மேலும் கூடுதலான பரிந்துரைகள் தேவையா? என்பதை அறிய மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட அதை குழுவை அமைத்து செழுமைப்படுத்தும் செயல்பாடும் உடனடித் தேவை;
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் வலியுறுத்தும் உயிர் வாழ் உரிமை, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் நியமனம், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு தேவை. சட்டங்கள் புத்தகத்தில் இருப்பது மட்டுமன்று, அதனைப் பாரபட்சமின்றி நிறைவேற்றுவதே இன்றையத்தேவை என பேராசிரியர் முரளி வலியுறுத்தினார்.
தமிழக முதல்வருக்காக சமர்ப்பிக்கும் இந்த அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 151 அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.