• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விளக்கம் கொடுத்த செந்தில்பாலாஜி…

Byதரணி

Oct 6, 2025

ஏன் பதறுகிறார்? அதிமுக கேள்வி! 

கரூரில்  செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு அரசியலில் இதுபற்றிய விவாதம் தொடர்கிறது. சம்பவம் நடந்து மூன்றாவது நாள் செப்டம்பர் 30 ஆம் தேதி இதுகுறித்து வீடியோ வெளியிட்ட விஜய்,  “ஐந்து மாவட்டத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறோம். அங்கெல்லாம் நடக்காதது கரூரில் எப்படி நடந்தது, ஏன் நடந்தது?” என்று கேள்வி எழுப்பினார்.

இதன் மூலம் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியை டார்கெட் வைத்துள்ளார் விஜய்.

ஏற்கனவே கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை, பத்து ரூபாய் பாட்டிலுக்கு என்று பாட்டு பாடி விஜய் விமர்சித்த போதுதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இது திட்டமிட்ட சதி என்றும், இதன் பின்னணியில் செந்தில்பாலாஜியின் பங்கு இருப்பதாகவும் தவெகவினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் அக்டோபர்  1ஆம் தேதி இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

“கரூரில் மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. 41 பேர் உயிரிழந்ததில், 31 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், அதாவது 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வகையிலும் நான் நேரடியாக அந்தக் குடும்பங்களுடன் தொடர்பில் உள்ளவன்.

இதில் சில குடும்பங்களுக்கு நான் ஏற்கெனவே சில தேவைகளை செய்து கொடுத்துள்ளேன்.

தவெக கேட்ட லைட் ஹவுஸ், உழவர் சந்தை போன்ற பகுதிகளில் இட வசதி போதாது என்பதால், வேலுசாமிபுரம் கொடுக்கப்பட்டது.  கரூர் சம்பவத்தில் எல்லா தொலைக்காட்சியும், யூடியூப் சேனல்களும் லைவ் செய்து கொண்டிருந்தார்கள். எனவே, அப்போது யாரும் சதி செய்திருந்தால் தெரியாமல் போயிருக்குமா?

25 ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்தில் சிலரால் அசாதாரண சூழலை உருவாக்க முடியுமா? அது சாத்தியமா?.

ஜெனரேட்டர் ரூமில் தகரத்தை உடைத்ததால்தான், அந்த கட்சியினரே ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர். இதனால் அவர்கள் ஏற்பாடு செய்த போகஸ் லைட்கள் மட்டுமே ஆஃப் ஆனது” என்று சொன்ன செந்தில்பாலாஜி அது தொடர்பான வீடியோக்களையும் காட்டினார்.

தொடர்ந்து, “விஜய் பேசும்போது, கீழே இருந்த சிலர் தண்ணீர் பாட்டில்களையும், உதவிகளையும் தொடர்ந்து கேட்டனர். ஒருவர் தொடர்ந்து தண்ணீர் கேட்கும் வீடியோ தொலைக்காட்சி லைவ்வில் தெரிகிறது.

கீழே இருந்த சிலரின் உதவி கோரிக்கைகள் அவரது கவனத்துக்கு செல்லாததால், கவனத்தை ஈர்க்க செருப்பு வீசியிருக்கலாம்.

ஒரு கூட்டத்துக்கு வரும்போது தலைவர் முன் இருக்கையில் இருந்து கையை அசைப்பது வழக்கம்.

ஆனால் கரூர் கூட்டத்துக்கு வரும்போது, 500 மீட்டர் முன்பாகவே விஜய் வாகனத்தின் உள்ளே சென்று விட்டார், லைட்டை அணைத்து விட்டார். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், வாகனத்தை கொஞ்சம் முன்னாலேயே நிறுத்த காவல் துறையினர் சொல்லியுள்ளனர். அதனையும் அவர்கள் கேட்கவில்லை.

அதுபோல கரூர் எல்லையிலிருந்து விஜய் மக்களை பார்த்து கையசைத்தவாறே வந்திருந்தால், அங்கேயே மக்கள் அவரை பார்த்துவிட்டு சென்றிருப்பார்கள், கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது என்பது மக்களின் கருத்து. எல்லா மக்களையும் விஜய் பேசும் இடத்துக்கு வரவழைக்க இதுபோல செய்யப்பட்டதா என்பது பொதுமக்களின் சந்தேகமாக உள்ளது.

கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என கேட்கிறார்கள். அதாவது, ‘எல்லா நாளும் மிக வேகமாக வண்டி ஓட்டுவேன், விபத்து நடக்கவில்லை. ஆனால், இன்று மட்டும் எப்படி விபத்து நடந்தது’ என ஒருவர் கேட்பது போல உள்ளது.

என் பெயர் சொல்லும்போதுதான் செருப்பு வீசப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால், விஜய் மொத்தம் 19 நிமிடம்தான் வாகனத்துக்கு மேலே இருந்தார்.

அவர் பேச ஆரம்பித்து 3-வது நிமிடத்தில் என்னைப் பற்றி பேச ஆரம்பித்து உடனே அதை நிறுத்திவிட்டு, என்னைப் பற்றி பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு தேர்தல் வாக்குறுதி தொடர்பாக பேசினார்.

விஜய் பேச ஆரம்பித்த 6-வது நிமிடத்தில் மயங்கி விழுந்தவர்களின் பகுதியிலிருந்து முதல் செருப்பு வீசப்பட்டது, பின்னர் சில நொடிகளில் மற்றொரு செருப்பு வீசப்பட்டது. 7-வது நிமிடத்தில் விஜயின் உதவியாளர், நிறைய பேர் மயக்கமடைவதாக அவரிடம் சொல்கிறார்.

அவரின் பாதுகாவலர்கள் 14-வது நிமிடத்தில் நிலைமை மோசமடைந்ததை சொல்கிறார்கள். 16-வது நிமிடத்தில்தான் என்னை குறித்து அவர் பாட்டுப் பாடி பேசினார். இதுதான் உண்மை.

என்னைப் பற்றி 16-வது நிமிடத்தில் பேசுகிறார், ஆனால், 6-வது நிமிடத்திலேயே செருப்பு வீசிவிட்டார்கள்.

ஒரு துயரம் நடந்துள்ளது, அதில் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் அல்லது அதனை திருத்திக்கொள்ள முயற்சி எடுக்காமல், தங்கள் தவறுகளை அரசின் மீது திருப்பும் வகையில் வதந்திகளை பரப்புகிறார்கள்.

நள்ளிரவில் தண்ணீர் பாட்டில்கள் வெளியில் போதுமான அளவு கிடைக்கவில்லை. அதனால், எங்களிடம் உள்ள தண்ணீர் பாட்டில், உணவுகளை எடுத்துக் கொடுத்தோம். இப்படி குறை சொல்பவர்கள், தண்ணீர் ஏற்பாடு செய்து தந்திருக்க வேண்டியதுதானே?.

உண்மை இப்படி இருக்க, காழ்ப்புணர்ச்சியோடு சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புகிறார்கள்.

எப்படி உடனே மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி என்றார் என்று கேட்கிறார்கள். நான் சம்பவத்தன்று கட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் இருந்தேன். எனக்கு அசம்பாவிதம் குறித்து தகவல் தெரிந்த உடனே அமராவதி மருத்துவமனைக்கு சென்றேன்.

நான் சென்ற சிறிது நேரத்தில் அதிமுக மாவட்ட செயலாளரும் வந்தார். மக்கள் பாதிக்கப்பட்ட தகவல் தெரிந்தவுடன், யாருக்கும் உதவி செய்யாமல் டிக்கெட் போட்டு சென்னைக்கு செல்ல சொல்கிறீர்களா?

கரூருக்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடு அற்ற கூட்டம். ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு வேலுசாமிபுரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஏன் அவ்வளவு பேர் அங்கே நிற்க முடியாதா? எந்த கட்சியிலும் கூட்டத்தை நிர்வகிக்க 2-ம் கட்ட தலைவர்கள் இருப்பார்கள்.

தவெகவில் அது நடந்ததா என்பதை மக்களே பார்க்க வேண்டும்” என்று செந்தில்பாலாஜி விளக்கினார்.

இதேநேரம் செந்தில்பாலாஜி ஏன் பதறுகிறார் என்று அதிமுக சார்பில் கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, EB அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ADGP ஆகியோர் பிரஸ் மீட் நடத்துகின்றனர. டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார். முதல்வர் வீடியோ வெளியிடுகிறார். வருவாய்ச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர். இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு. இவ்ளோ பதட்டப்பட்டு  என்ன சொல்ல வருகிறது திமுக?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா? “அரசியல் செய்யாதீர்” “அரசியல் செய்யாதீர்” என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே?

உங்கள் பதட்டம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள்.

இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம். இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், “பத்து ரூபாய்” என்று எடப்பாடியார் அவர்கள் சொன்னாலே, “பாலாஜி” என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார்.
அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை, Gross Negligence-ஐ மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது?

ஏற்கனவே “காசு வாங்கினேன்… ஆனா திரும்ப கொடுத்தேன்” ன்னு சொல்லி தான் ED வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீங்களே…. இப்போ திரும்ப அதே Tone-ல பேசுறீங்களே… இந்த முறை சிபிஐ வந்தால், அன்பில் மகேஷ் சொன்னதைப் போல நிபந்தனைகளை ஃபாலோ செய்வீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது அதிமுக.