அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை கட்சியில் மீண்டும் 10 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிபந்தனை விதித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன்.
ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று (செப்டம்பர் 5) கோபிச்செட்டி பாளையம் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன்.
அப்போது அவர்,
“வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். எந்த நிபந்தனையும் இன்றி எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் வந்தபோது மாயத் தேவர் இரண்டு லட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்., அதன் பின் கோவை, மருங்காபுரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
1975 இல் பொதுக்குழுவில் என்னை பொருளாளராக தேர்ந்தெடுத்து ஆணையிட்டார், அந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்.ஜி.ஆர். என்னை சத்யா ஸ்டுடியோவுக்கு அழைத்து பாராட்டினார்.
எஸ்.டிஎஸ், கோவை செழியன் போன்றோர் இயக்கத்தில் இருந்து வெளியே சென்றபோது அவரது இல்லத்துக்கே சென்று புரட்சித் தலைவர் அழைத்தார்.
அவரது மறைவுக்குப் பின் புரட்சித் தலைவி அம்மா பொறுப்பேற்றார். சிறப்பாக ஆட்சியை நடத்தினார். தன்னை மிகக் கடுமையாக எதிர்த்த காளிமுத்து, இப்போது இருக்கிற சிலர் அவர்களின் பெயர் சொல்ல விரும்பவில்லை ஆகியோரைக் கூட தாயுள்ளத்தோடு மன்னித்து அரவணைத்துக் கொண்டார்.
அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றால் வெளியே சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் வெற்றி என்ற இலக்கை எட்ட முடியும்.
அதிமுகவை ஒன்றிணைக்க நான், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் பொதுச்செயலாளரை சந்தித்தோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கும் மனநிலையில் இல்லை,
நாம் வருகிற தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்கு நல்லாட்சியை அமைப்பதற்கு தொண்டர்களின் குரலாக இன்று பேசுகிறேன்.
எல்லாரையும் அழையுங்கள்… அவர்களை கழகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அப்படி செய்கின்றபோது அது விரைந்து முடிக்கப்பட வேண்டும். ஏனென்றால் தேர்தல் களம் தொடங்கிவிட்டது.
இன்னும் பத்து நாட்களுக்குள் அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், அப்படி விரைவில் இதை தொடங்கவில்லை என்றால், ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் நாங்களே முன்னெடுப்போம்.
அதுமட்டுமல்ல… இதற்கு முடிவு வந்தால்தான் எடப்பாடியின் சுற்றுப் பயணத்தில் நான் கலந்துகொள்வேன்” என்று அறிவித்துள்ளார் செங்கோட்டையன்.