

மதுரை மாவட்டத்தில், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு கூட்டுறவுத் துறையின் மூலம் குறைந்த விலையில் இதுவரை 12 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் மூலம் பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு இதுவரை 12 டன் அளவில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்ததாவது,
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கிலோ ரூபாய் 180 வரையில் விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறையின் மூலம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து மலிவு விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 4 சுயசேவை பிரிவு அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்) உட்பட மொத்தம் 25 இடங்களில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தக்காளி சந்தை விலை கிலோ ரூபாய் 160 முதல் ரூபாய் 180 வரை இருந்த நிலையில் கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து கிலோ ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாளொன்றிற்கு சராசரியாக 750 முதல் 800 கிலோ வரையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மட்டும் கடந்த 16 நாட்களில் மொத்தம் 12 ஆயிரம் கிலோ (12 டன்) தக்காளி பொதுமக்களுக்கு குறைந்த விலையில விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நலன் காக்கப்பட்டதோடு, தக்காளி விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.
