சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியத்தில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 13 சிறுமி சானிடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறுமி சேவை இல்லத்தில் தூங்கி அதிகாலையில் எழுந்த பொழுது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் முகத்தில் துணியை மூடி தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளார்.
அப்போது மாணவி அவரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் அந்த நபர் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் சிறுமி கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதையடுத்து அரசு சேவை இல்லத்தில் இருந்த சக மாணவிகள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிட்லபாக்கம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அரசு சேவை இல்லத்தில் சுற்றுசுவர் அதிகஉயரம் கொண்டவை இதனால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாது.
மேலும் முகப்பு பகுதியில் காவலாளி போடப்பட்டு இருப்பதால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்ல வாய்ப்பு இல்லாததால் போலீசார் அரசு சேவை இல்லத்தின் காவலாளியை காவல் நிலையம் அழைத்துச் சென்று சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காவலாளி தான் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காவலாளியை விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ(37) என்பது தெரியவந்துள்ளது. மேலும் மேத்யூவின் தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். அவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் இவருக்கு அங்கு பணி வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த ஏழு வருடங்களாக அங்கு காவலாளியாக மேத்யூ பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் பாதிப்புக்கு உள்ளான மாணவி நான்கு நாட்களுக்கு முன்னால் தான் அரசு சேவை இல்லத்தில் சேர்ந்ததால் இவர் வெளியில் எதையும் சொல்ல மாட்டார் என்று எண்ணி அவரிடம் பாலியல் தொந்தரவில் காவலாளி ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது,
இதையடுத்து மேத்யூ மீது சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று வேறு எந்த மாணவிகளிடமாவது இவர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு சேவை இல்லத்தில் தங்கி உள்ள மற்ற மாணவிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.