• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்..,

ByT. Balasubramaniyam

Nov 11, 2025

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு(எஸ்.ஐ.ஆர்)யை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக சட்ட திட்டக் திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமை வகித்தார்.

துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டு பேசுகையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காகவே செய்யப்படுவது இந்தவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வாகும். அரியானா, மகாராஷ்டிரா, பிகார் போன்ற மாநிலங்களில், இத்தகைய நடைமுறையை பின்பற்றி, ஏற்கனவே நிறைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கப்படும் மக்களின் பெயர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஒன்றிய பாஜக அரசுக்கு ,இந்திய தேர்தல் ஆணையம் குள்ளநரி போல் செயல்பட்டு இதைச் செய்கிறது.

இதில் மிக பெரிய ஆபத்து இருக்கிறது. பிகரில் இஸ்லாமியர்கள், தலித் மக்கள், பெண்கள் என 68 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு யாரும் வாக்களிக்கத் தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், லட்சக்கணக்கான மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு, தொகுதி மறுசீரமைப்பு செய்ய உள்ளார்கள்.
எனவே வாக்குச்சாவடி முகவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தில் கவனமாக ஈடுபட வேண்டும். தகுதியுள்ள எந்த வாக்காளர்களும் விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை அமர மூர்த்தி, மதிமுக மாவட்டச் செயலாளர் க.ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் க.நடராஜன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அங்கனூர் சிவா, கதிர்வளவன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தி.விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன்,எம்.ஜி.ஆர் கழக மாவட்டச் செயலாளர் ஏ.மணிவேல் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் வே.சாமிநாதன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் சையது இப்ராஹீம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் எம்.சாகுல்ஹமீது, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அக்பர் அலி, எஸ்டிபிஐ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமீன் சுல்தான் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.