ஔரங்கசீப்பின் கல்லறை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் நிலவி வரும் நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் உள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று கடந்த ஒருவாரமாக இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் சிவசேனா உறுப்பினர் நரேஷ் மாஸ்கே இந்த கோரிக்கையை முன்வைத்ததை தொடர்ந்து இதுதொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
சாம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர் மகால் பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை அருகே பஜ்ரங் தள உறுப்பினர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததாக வதந்திகள் பரவின. இதுகுறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது. இது இஸ்லாமியர்கள் இடையே சீற்றத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மகால், கோட்வாலி, கணெஷ்பேத் மற்றும் சிதான்விஸ் பூங்கா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கூடி போராட்டம் நடத்தினர். சிட்னி பூங்கா மற்றும் மகால் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். அவர்கள் பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது கற்களை வீசினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் 2 வாகனங்கள் எரிந்து சேதமாகின. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூர் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 50- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்கள் அமைதி காக்குமாறு அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஔவுரங்கசீப் கல்லறையை சுற்றி 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.