• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா வேண்டும்… அமைச்சர் அன்பில் மகேஷ்

Byகாயத்ரி

Nov 24, 2021

“பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ‘அடல் டிங்கரிங் ஆய்வகம்’ தொடக்க விழா நடைபெற்றது. அடல் டிங்கரிங் ஆய்வகம் என்பது, மாணவர்களின் அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கான நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் ஆகும்.இந்த ஆய்வகத்தை தொடங்கி வைத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது: “இந்தப் பள்ளியில் 900 ஆக இருந்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. அண்ணா பிறந்த மண்ணில் அரசுப் பள்ளியின் வளர்ச்சி மகிழ்ச்சிக்குரியது. அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர முன்னுரிமை அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரும் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆன்-லைன் வகுப்புகள் பல பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. இது நேரடி வகுப்புக்கு நிகராக வர முடியாது. ஆசிரியர்கள் மாணவர்களை அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.


பள்ளி மாணவிகளுக்கு சில பிரச்னைகள் வருகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும். அதற்கு தனியார் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி போன்றவற்றைக் கூட பயன்படுத்தலாம்.ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களும் ஆசிரியர்களை தங்களது மற்றொரு பெற்றோராக பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்பது நமது நலனுக்குத்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்” என்றார்.