மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சமயநல்லூர் முதல் தோடனேரி வரை பேருந்தில் சென்று வர ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆவதாக பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சாலையின் இருபுறமும் மரங்கள் சமயநல்லூர் ரயில்வே கேட்டை பேருந்து கடந்து செல்ல முடியாத நிலை தோடனேரி சென்று சமயநல்லூர் திரும்பும் வரை 5க்கும் மேற்பட்ட முறை ரயில்வே கேட் பூட்ட வேண்டிய சூழ்நிலை,
உள்ளிட்ட காரணங்களால் தோடனேரியில் இருந்து சமயநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் உள்ளிட்டவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சமயநல்லூர் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் ஆய்வு மேற்கொண்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா அவர்களிடம் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோடனேரி கிராமத்திற்கு முறையான பேருந்து வசதி இல்லை என புகார் தெரிவித்தனர். பேருந்து வசதி இல்லாத நிலையில் பள்ளிக்கு வந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாகவும் கூறினர்.
உடனடியாக போக்குவரத்து துறை மதுரை மண்டல மேலாளரை தொடர்பு கொண்ட எம்எல்ஏ உடனடியாக பள்ளி செல்லும் நேரத்திற்கு ஏற்றவாறு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சமயநல்லூர் முதல் தோடனேரி வரை உள்ள பகுதிகளை ஆய்வு செய்து சென்ற நிலையில், வெற்றிப்பயணம் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்ட புதிய பேருந்தை தோடனேரி கிராமத்திற்கு இன்று அனுப்பி வைத்தனர்.
இந்தப் பேருந்தை டிரைவர் லட்சுமணன் நடத்துனர் கலைச்செல்வன் ஆகியோர் இயக்கி சென்றனர்.

இந்த நிலையில் சமயநல்லூரில் இருந்து தோடனேரி சென்ற இந்த புதிய பேருந்து பல்வேறு இடங்களில் சாலையில் திரும்ப முடியாமலும் சாலையின் இரு புறங்களில் உள்ள மரங்களால் செல்ல முடியாமலும் ரயில்வே கேட் பகுதியில் பத்தடி நீளமுள்ள தடுப்பு சுவர் உள்ள பகுதியில் திருப்ப முடியாமல் கடும் சிரமபட்டனர்.
உச்சகட்டமாக தோடனேரி சென்று திரும்புவதற்குள் ரயில் செல்வதற்காக ஐந்து முறைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்பட்டது இதன் காரணமாகவும் போக்குவரத்து பணியாளர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள். இது போன்ற காரணங்களால் எட்டு மணிக்கு சமயநல்லூரில் இருந்து கிளம்பிய பேருந்து மீண்டும் சமயநல்லூர் வருவதற்கு 9 மணி ஆகிவிட்டது. மூன்று கிலோ மீட்டர் தூரமே உள்ள தோடனேரி கிராமத்திற்கு சென்று வர ஒரு மணி நேரம் ஆன நிலையில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவ மாணவிகள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களும் தங்களின் பணிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக கூறினார்கள்.

ஆகையால் இது போன்ற பகுதிகளுக்கு குறுகலான அளவில் உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் சாலையின் இரு புறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பேருந்து செல்வதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும் ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் தாமதத்தை சரி செய்வதற்கு ரயில்வே பகுதியில் அண்டர் பாஸ் பாலம் ஒன்று மிக விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கூறினார்கள்.
மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைப்பது எளிது என்றும் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக இந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறினார்கள். ஆகையால் தோடனேரி முதல் சமயநல்லூர் வரை பேருந்து சேவையை முறையாக இயக்குவதற்கான மாற்று திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



