இந்த 2021 ஆம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது ‘ஷெர்னி’ படத்திற்காக நடிகை வித்யா பாலனுக்கும், வெப் சீரிஸ்களில் நடித்த நடிகைகளில் ’தி ஃபேமிலி மேன் 2’வுக்காக சிறந்த நடிகைக்கான விருது சமந்தாவுக்கும் கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் இவ்விருது விழா கொரோனா காரணமாக இம்முறை ஆன்லைன் மூலம் நடந்தது. இவ்விழாவில், நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த சமந்தாவுக்கு நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் சிறந்த நடிகைக்கான விருது வென்றதையொட்டி கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று நடிகை சமந்தா பகிர்ந்திருக்கிறார். இந்திய அளவில் சிறந்த படம், சிறந்த நடிகருக்கான விருது என ’சூரரைப் போற்று’ படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.