• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

ByA.Tamilselvan

Mar 21, 2023

2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை விட ரூ.5,897 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் தாக்கல் செய்த வேளாண்பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்…
யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிற்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்படும். கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். 2504 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக்குட்டைகள் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் செய்யப்படும்.
5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும். 60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கப்படுகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மின்னணு வேளாண்மை திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. 37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பெறும் வேளாண் இடுபொருளுக்கு பணமில்லா பரிவர்த்தனை.
தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் அடைய தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும். ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க இந்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயிர் பாதிப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியத்திற்கு ரூ.2337 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமிக்கப்படுவார். 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படுவர். கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும். தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ராமநாதபுரத்தில் மல்லிகை செடிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத் தரவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தக்காளி ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குளிர்கால காய்கறிகளின் சாகுபடிக்கு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 1000 ஹெக்டேரில் செளசெள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக இந்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நுண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53400 ஹெக்டேர் நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு மானியமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 300 குடும்பங்களுக்கு மா, பலா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடி தொகுப்பு விநியோகிக்கப்படும். இதற்காக ரூ.15 கோடி ஒதுக்கப்படுகிறது. பசுமைக் குடில், நிழல் வலைக் குடில் அமைத்து உயர்மதிப்புள்ள காய்கறிகள், பூக்கள் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும். இத்தகைய பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையைப் பரவலாக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 ஹெக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 ஹெக்டரில் நடவுசெய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை. உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண்மையில் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித் துறையுடன் இணைந்து பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பனை சாகுபடியினை ஊக்குவித்து பனை விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.
இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், வாடகை மையங்கள் உள்ளிட்டவைக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் காவேரி, வெண்ணாறு பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் 1,32,000 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெறும். அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை. 27 சேமிப்புக் கிடங்குகளில் ரூ.54 கோடியில் மறுகட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதிக வரத்துள்ள 100 விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிக்கப்படும். 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்பு கிடங்குகள், 25 குளிர்பதன கிடங்குகளில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறை அமல்படுத்தப்படுகிறது. பூச்சிகள் பற்றிய புரிதலை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலைகழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும். கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைத்திட ரூ.15 கோடி ஒதுக்கீடு. வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு வேளாண் பல்கலை.க்கு நடப்பாண்டில் ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100, பொதுரகம் நெலுக்கு குவிண்டாலுக்கு ரூ.75 அதிகமாக வழங்கப்படும். அதேபோல், 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் வழங்க ஏதுவாக, ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர்நாட்டின மீன் வளர்ப்பை ஊக்குவித்து உற்பத்தியை பெருக்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ‘மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படும். கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். சந்தனம்,தேக்கு, செம்மரம் உள்ளிட்ட மதிப்புள்ள மரங்கள் நன்கு வளர்ந்து பலன் தரும் வேளையில், வெட்டுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவிரி டெல்டா பகுதியில் திருச்சி – நாகை இடையில் வேளாண் தொழில் பெருந்தடம்’ அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண்மை துறை திட்டங்கள், அறிவிப்புகளுக்காக நடப்பாண்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.