• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சேலம் – விருத்தாச்சலம் புதிய மின்வழித்தடத்தில்.., அதிவேக ரயிலை இயக்குவதற்கான ஆய்வுப்பணி துவக்கம்..!

சேலம்,விருத்தாச்சலம் பாதையில் மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து அதிவேக ரயிலை இயக்குவதற்கான ஆய்வு துவங்கியது.


சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் விருத்தாச்சலம் ரயில் பாதை மீட்டர் கேஜில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றி 13 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்பாதையை மின்பாதையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

சேலத்தில் இருந்து ஆத்தூர், சின்னசேலம் வழியாக விருதாச்சலம் வரை மின்பாதை அமைக்கும் பணி கடந்த எட்டு மாதங்களாக நடந்து வந்தது. கடந்த மாத இறுதியில் மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் மின் ஓட்டத்திற்கான ஆயத்த பணிகளை ரயில்வே அதிகாரிகள் ஒரு மாதங்களாக மேற்கொண்டு வந்தனர். இதில் மின்சாரம் எஞ்சினை மட்டும் இயக்கிப் பார்த்து பல கட்ட சோதனைகள் நடத்தினர்.


இந்த நிலையில் பெங்களுருவை தலைமையிடமாகக் கொண்டிருக்கும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சேலம் விருதாச்சலம் மார்க்கத்தில் அதிவேக மின்சார ரயிலை இயக்கி ஆய்வை துவங்கினர்.இன்று காலை சேலம் ரயில்வே ஜங்ஷனில் தனிமின்சார சிறப்பு ரயிலில் புறப்பட்டு மின் வழிப்பாதை இணைப்புகள், மின் நிலையங்களின் செயல்பாடு, சிக்னல் போன்றவற்றை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். விருதாச்சலம் வரை சென்று ஆய்வு பணியை முழுமையாக முடிக்கின்றனர்.


பின்னர் நாளை காலை 10மணி முதல் மதியம் 2 மணிக்குள் விருதாச்சலத்தில் இந்த சோதனையை நடத்தும் இரண்டு நாட்களிலும் தண்டவாள பகுதிகளுக்கும் பொதுமக்கள் வர வேண்டாம்,எந்த இடத்திலும் தண்டவாளத்தை கடந்து செல்லக் கூடாது,தண்டவாளத்தை ஒட்டியிருக்கும் கிராம மக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் 45 நிமிடத்திற்கு மேலாக தண்டவாளத்தை கடக்கும் சாலை மூடப்பட்டதால் மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிக்கி தவித்தனர் காலை கல்லூரிக்கு செல்லும் பேருந்துகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என ஏராளமானோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதையடுத்து இப்பகுதியை ரயில் கடந்து சென்றபின் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய 20 நிமிடத்திற்கு மேலாகியது.