இன்ஜின் வெடித்ததால் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மத்திய தரைக்கடலில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அரசுக்கு சொந்தமான உர்சா மேஜர் என்ற சரக்கு கப்பல் கிரேன்களை ஏற்றிக்கொண்டு 16 பயணிகளுடன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து தூர கிழக்கில் உள்ள விளாடிவோஸ்டோக்கிற்கு கடந்த டிச.11-ம் தேதி புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் அல்ஜீரியாவிற்கும், ஸ்பெயினுக்கும் இடையில் மத்திய தரைக்கடலில் சென்று கொண்டிருந்த கப்பலில் திடீரென இன்ஜின் வெடித்தது. இதனால் கப்பல் கடலில் மூழ்கியது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரஷ்ய பாதுகாப்பு குழுவினர் கப்பலில் இருந்த 16 பேரில் 14 பேரை மீட்டுள்ளனர். கப்பல் மூழ்கிய போது மற்ற இருவரும் கடலில் குதித்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட 14 பேரும் ஸ்பெயினுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மேலும் 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கப்பலில் திடீரென இன்ஜின் அறை வெடித்ததற்கு என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.