• Fri. Apr 26th, 2024

உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கிய ரஷ்ய ராணும்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் ரஷ்ய டாங்கிகள் உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கி இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் கீவை நோக்கி 80 கி.மீ தொலைவு வரை ரஷ்ய படைகள் முன்னேறி இருக்கின்றன.
எப்போது குண்டு விழும்? போரின் முடிவில் நாம் உயிர் பிழைப்போமா? பழைய அமைதியான வாழ்க்கை நமக்கு கிடைக்குமா? நமது குடும்பத்தினர், நண்பர்கள் உயிரோடு இருப்பார்களா? என்பன போன்ற மில்லியன் டாலர் கேள்விகளோடும் அச்சத்தோடும் நாட்களை கடத்தி வருகின்றனர் உக்ரைன் மக்கள். அங்கு நிலவும் போர் பதற்றத்தின் தீவிரத்தை கீழ்காணும் சில சம்பவங்களும், உரையாடல்களும் உங்களுக்கு உணர்த்தும்.

அது ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத சேவை மையம்… தலைநகர் கீவிலிருந்து வடகிழக்கு திசை நோக்கிய சாலையோரம் அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உக்ரைன் அதிகாரி, அவ்வழியாக வாகனத்தில் செல்லும் ஓட்டுநரிடம், “இதற்கு மேல் செல்லாதே… அங்கு ரஷ்ய படையினர் உள்ளார்கள். ரஷ்யாவின் டாங்கிகள் வெறும் 2 கி.மீ. தூரத்தில்தான் உள்ளன. வாகனத்தை திருப்பிக்கொண்டு வந்த வழியில் சென்றுவிடு… ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ZIG ZAG கோணத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்…” என அறிவுறுத்துகிறார். அதன் பின்னர் தனது பணிக்கு திரும்பும் அந்த உக்ரைன் அதிகாரி, ரஷ்ய டாங்கிகள் கீவை நோக்கி நெருங்கிவிட்டதாக எச்சரிக்கை விடுக்கிறார்.

கீவுக்கு அருகே உள்ள கிராமம் வெலிகா டைமெர்கா… “போர் தொடங்கியவுடன் அங்கிருந்த பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். ஆண்கள் மட்டுமே அங்கு எஞ்சி இருக்கிறார்கள்.” எனக்கூறுகிறார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலரான ஒலெக்.
“2 நாட்களுக்கு முன்புதான் கீவுக்கு அருகேயுள்ள செவ்சென்கோவ் மற்றும் போடனிவ்கா ஆகிய கிராமங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. செவ்வாய்கிழமை ரஷ்யா எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஏவுகனைகள் எங்களை நோக்கி விழுந்தன.” என வேதனையுடன் கூறுகிறார் அவர்.
“ரஷ்யா நடத்திய தாக்குதலில் இங்கிருந்த எங்களின் 2 மாடி வீடு இடிந்து விழுந்தது. என் தந்தையும் தாயும் பாதுகாப்பான இடத்துக்கு தஞ்சம் புகுந்ததால் உயிர் பிழைந்தனர்” என கண்கலங்குகிறார் வாடிம் என்ற கிராமவாசி.

“இன்று இந்த ஊர் அமைதியாக இருக்கிறது… நேற்று அப்படியில்லை… 40 டாங்கிகள் உட்பட 70 வாகனங்களுடன் 300 ரஷ்ய வீரர்கள் நேற்று இந்த கிராமத்துக்குள் புகுந்தனர். அவர்கள் வீடுகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்பாவிகளை அச்சுறுத்தினர். கையில் கிடைத்ததையெல்லாம் திருடிச் சென்றனர்.” எனக் கூறுகிறார் யுரி என்ற நாய் பயிற்சியாளர். மேற்குலக நாடுகளின் உதவி உக்ரைனுக்கு அவசியம் தேவைப்படுகிறது என அவர் கேட்டுகொண்டார்.

ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைன் பொதுமக்களுக்கு ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தும் விதம் குறித்து சில ராணுவ வீரர்கள் பயிற்சியளித்துக் கொண்டிருந்தனர். அந்த பயிற்சியில் பங்கேற்றுள்ள ஒலெக்சியிடம், இந்த கிராமத்தை ரஷ்ய படையினர் ஆக்கிரமித்தால் என்ன செய்வீர்கள்? என செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். “50க்கு 50” என்ற பதில் மட்டுமே அவரிடமிருந்து வருகிறது… சோகம் கலந்த சிரிப்புடன்.

தலைநகர் கீவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலையில் உள்ள சிறிய நகரம் ப்ரோவரி… கிழக்கு திசையிலிருந்து கீவுக்குள் நுழைய இதை கடக்க வேண்டும். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 22 வயது உக்ரைன் ராணுவ வீரர் லாடிஸ்லாவ் கூறுகையில், “ரஷ்ய படையினரிடம் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மண்டியிட்டுள்ளனர். எனவே குண்டுவீசி இதை முடிக்க முயல்வார்கள்.” என்கிறார். இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி சுலிம் தெரிவிக்கையில், “ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறுவார்கள். ஆனால், ரஷ்ய அதிகாரிகள் மனநிலையில் மாற்றம் தென்படுகிறது. ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு சிறிதளவு உள்ளது.” என்கிறார் நம்பிக்கையுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *