• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு!

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்த மரகத லிங்கம் திருக்குவளையில் உள்ளதியாகராஜர் கோயிலுக்கு சொந்தமானதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டும் வருகிறது.

இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தஞ்சாவூர் அருளானந்த நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிவன் சிலை பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று, அங்கிருந்த என்.எஸ்.அருண பாஸ்கர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், தனது தந்தை சாமியப்பன் வசம், தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை தற்போது வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த சிலை அவரது தந்தையிடம் எப்படி வந்தது என்று கேட்டபோது, அதுதொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை, வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்து எங்களிடம் ஒப்படைத்தார். அதை, அங்கீகாரம் பெற்ற மரகதக்கல் மதிப்பீட்டாளர்களிடம் காண்பித்தபோது அதன் மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிவித்தனர்.

2016-ல் மாயமான லிங்கமா?

இதற்கிடையே, கடந்த 2016 அக்.9-ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜர் கோயிலில் இருந்து மரகதலிங்கம் கொள்ளை போனது தொடர்பாக தருமபுர ஆதீன மடத்தின் கண்காணிப்பாளர் சவுரிராஜன் திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில், தற்போது மீீட்கப்பட்டுள்ள மரகத லிங்கச் சிலை, கொள்ளை போன சிலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிலையை வைத்திருந்த சாமியப்பன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவர் குணம்அடைந்தவுடன் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்புவோம்.

மேலும், சாமியப்பனிடம் சிலை எப்படி வந்தது, சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம், என்றனர்…

மரகத லிங்கத்தை மீட்ட தனிப்படை போலீஸாரை டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி ஆகியோர் பாராட்டினர்..