திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திரா உள்துறை அமைச்சர் அனிதா அறிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சொர்க்க வாசல் வழியாக தரிசனம் காண இலவச டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் 90 இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கவுண்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பே அந்த இடங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
விஷ்ணுநிவாசம் பகுதியில் திடீரென கவுண்டர்கள் திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் இலவச டோக்கனைப் பெறுவதற்காக ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறிச்சென்றவர்களா பலர் மயக்கமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காவல் துறையின் அஜாக்கிரதையே இந்த சம்பவத்திற்கு காரணம் என திருப்பதி மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்புக் குறைபாடே விபத்திற்குக் காரணம் என பக்தர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என ஆந்திரா உள்துறை அமைச்சர் அனிதா அறிவித்துள்ளார்.மேலும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டோரையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.