முருகப்பெருமானின் 3 வது படை வீடான பழனியில் பராமரிப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை சோதனை ஒட்டத்திற்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் தினமும் அதிக பக்தர்கள் வரும் ஆலயங்களில் முக்கியமானது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்சுகளும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார்களும் இயக்கப்படுகின்றன. நவம்பர் 3, 2004ல் தொடங்கப்பட்ட இந்த ரோப்கார் 3 நிமிடங்களில் மலைக்கோவிலை அடைகிறது. ஒரு மணி நேரத்தில் 450 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த ரோப்கார் திடீரென ஆகஸ்ட் 18ம் தேதி ஷாப்ட் இயந்திரம் பழுதானது.
இதனையடுத்து ரோப்கார் பழுதுபார்க்கப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதில் புதிய ஷாப்ட் இயந்திரம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பஞ்சாமிர்த டின்களை அடுக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இனி வழக்கம் போல் ரோப்கார்களை இயக்கலாம் என வல்லுநர் குழுவின் ஒப்புதல் கிடைத்ததன் பேரில் இன்று முதல் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை ரோப்கார் பெட்டி மற்றும் இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் உற்சாகத்துடன் பயணிக்க துவங்கி உள்ளனர். இதுபோல் ரோப்கார் நிலையத்தின் முன்புறம் கைபேசி பாதுகாப்பு மையமும் இன்றுமுதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மொபைல் போன்கள், கேமிராக்கள் உள்ளனவா என பக்தர்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரோப்கார் நிலையத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் இன்று ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 50 நாட்கள் தடைக்கு பிறகு ரோப்கார் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.