மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த வாரம் வந்து திறந்து வைத்த பெயர் பலகையினை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வருவாய் மற்றும் காவல்துறையினர் அகற்றினர்.

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி சம்பந்தப்பட்ட கொடி கம்பங்கள் மற்றும் பெயர்பலகையை நீக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு உள்ளதால் .அந்த பெயர் பலகையை வருவாய்த் துறையினர் நீக்கியதாக கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சியின் பெயர் பலகை மற்றும் கொடி திறக்க அனுமதி அளித்த ஒரே வாரத்தில் அகற்றவும் செய்ததால் இதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் சாலை மறியல் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாலமேடு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.