• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“ரிங் ரிங்” திரை விமர்சனம்!

Byஜெ.துரை

Jan 31, 2025

சக்திவேல் செல்வகுமார் தயாரித்து அவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்
“ரிங் ரிங்”. இத்திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மனிதர்கள் விசித்திரமானவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ரகசியங்கள் உண்டு. ஒவ்வொருவர் மனதின் ரகசியமான உள்ளறைகளில் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. காணப்படுகிற மனம் வேறு, அறியப்படுகிற மனம் வேறு என்பது உள்ளே நுழைந்து பார்த்தால் தான் தெரியும்.

இந்த வேறுபாடு பெற்றோர் பிள்ளைகள், கணவன், மனைவி ஆகியோரிடமும் உண்டு. ஒருவரைப் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இந்தக் கருவை மையமாக்கி ‘ரிங் ரிங்’ திரைப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

நண்பர்கள் நால்வர், அவர்களுக்கு தலா ஒரு இணை விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா,டேனியல் அன்னி போப் – ஜமுனா , பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், அர்ஜுனன் – சஹானா என, நான்கு இணைகள் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

4 பேர் நண்பர்கள், சுமுகமான உறவில் இருப்பவர்கள் . எப்போதும் கேலி கிண்டல் என்று வாழ்பவர்கள் .கலகலப்பாகச் சென்று கொண்டிருந்த இந்த நட்பு வட்டத்தில் ஒரு விளையாட்டு தொடங்குகிறது. பிறந்தநாள் சந்திப்பை முன்னிட்டு அங்கே மகிழ்ச்சியாகக் கூடியவர்கள் மத்தியில் அந்த விளையாட்டு சவாலாகி விபரீதமாகி ஒரு கட்டத்தில் யுத்தமாக மாறுகிறது.

அப்படி என்ன விளையாட்டு?கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு வந்த போனை ஸ்பீக்கர் போட்டு அடுத்தவர்கள் கேட்க வேண்டும். அதேபோல் மனைவியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வரும் தொலைபேசிகளால் அவர்களது மன உணர்வுகளும் ஒருவருக்கொருவர் பொய்யாக நடிப்பதும் அம்பலமாகிறது.இப்படியே சென்று கொண்டிருந்ததால் நான்கு ஜோடி வாழ்க்கையிலும் புயல் அடிக்கிறது.கருத்து மோதல், சந்தேகங்கள், துரோகங்கள், அவமானங்கள் போன்றவை முளைக்கின்றன. அவர்கள் மத்தியில் விரிசல்கள் விழுகின்றன.

ஒரு கட்டத்தில் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். கதையின் க்ளைமாக்ஸ் என்ன என்பதுதான் ரிங் ரிங் படத்தின் கதை.

இப்படி நான்கு ஜோடிகளுமே ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படுகிறார்கள். தங்கள் நட்பினை மறுபரிசீலனை செய்கிறார்கள், இறுதியில் அந்தந்த சந்தர்ப்பத்து நியாயங்கள் தான் மனித வாழ்க்கையின் செயல்பாடுகள் என்ற இயல்பினைப் புரிந்து கொண்டு குறைகளை மறந்து மன்னிக்கத் தொடங்குகிறார்கள். மனதில் உள்ளதைத்தான் பேசியிருக்கிறார்கள் என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கிறார்கள்.காரணத்தை ஆராய்கிறார்கள். இதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் அமைதியை நோக்கிச் செல்கிறது எனப் படம் முடிகிறது.

ரகசியங்களை மறைப்பதில் தவறில்லை நேசிக்கிறவர்களில் சந்தோஷத்திற்காக என்று கதாபாத்திரமே கூறியுள்ளனர்.

படத்தில் தியாகு பாத்திரத்தில் விவேக் பிரசன்னா, பூஜாவாக சாக்ஷி அகர்வால், கதிராக டேனியல்,சிவாவாக பிரவீன் ராஜா, அர்ஜுனாக அர்ஜுனன்,சுயமாக ஸ்வயம் சித்தா, இந்துவாக சஹானா, ஜமுனாவாக ஜமுனா என நடித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் சித்தரிப்பு சரியாக இருப்பதால் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

குறிப்பாக விவேக் பிரசன்னா – ஸ்வயம் ஜோடி நிறைய நடிப்பு தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.இயல்பான நடிப்பால் அந்த இணை முதலிடம் பெறுகிறது.சில இடங்களில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.

இன்னொரு பெண்ணுடனான தொடர்பு தெரிந்து காதலியிடம் மாட்டிக் கொள்ளும் போது போதையில் செஞ்சிட்டேன் என்று விழி பிதுங்கி சமாளித்து உளறும் டேனியல் நடிப்பும் கலகல ரகம்.பிரவீன் ராஜா – சாக்ஷி அகர்வாலுக்குள் நடக்கும் உரையாடலும், அவர்களுக்குள் விழும் சந்தேக முடிச்சு அவிழ்வதும் நல்லதொரு உணர்வு வெளிப்பாடுகள்.அர்ஜுனன் – சஹானா இருவருக்குள் நிலவும் புரிதலின்மையின் வெளிப்பாடுகளை நன்றாகவே நடிப்பில் காட்டியுள்ளனர்.குறிப்பாக அர்ஜுனன் அதிகம் பேசாமலே விழிகளாலே உணர்வுகளைக் கடத்தி உள்ளார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வழியே வெளிப்பட்டுள்ளன. திரைக்கதையின் சுவாரஸ்யத்தால் பெரிதாக வெளிப்புறக் காட்சிகளுக்கு அவசியம் இல்லையென்று இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் தொலைக்காட்சித் தொடர்களின் உரையாடல் போல ஒரு தோற்றத்தைத் தருகிறது.

படத்திற்கு ஏற்ற துல்லியமான வண்ணமயமான ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பிரசாத். உள்ளரங்கில் நடக்கும் காட்சிகளை அழகாக எடுத்துள்ளவர், கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்மிடையே நெருக்கமாகக் கொண்டு வருகிறார்.

கதைக்குப் பொருத்தமான பின்னணி இசை வழங்கி காட்சிகளுக்கு அழுத்தம் சேர்த்துள்ளார். இசையமைப்பாளர் வசந்த் இசைப்பேட்டை. ‘அழகான நேரங்கள் ‘பாடல் மீண்டும் கேட்கும் ரகம்.

கதையில் வில்லன்கள் என்று எதுவுமே இல்லை சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் திரைக்கதையின் விறுவிறுப்புக்குக் காரணமாக இருக்கும் படி அமைத்துள்ளார்கள். ஒவ்வொருவரின் ரகசியங்கள் வெளியே வரும்போதும் திரைக்கதையில் கலகலப்பும் பரபரப்பும் தோரணம் கட்டி நிற்கின்றன.

மாறி வரும் அவசர யுகத்தில் செல்போனின் தாக்கத்தை, அதன் விளைவில் நிகழும் கலாச்சார அதிர்வுகளை ஓர் இழையாக்கி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
இயக்குநர் சக்திவேல். மொத்தத்தில் “ரிங் ரிங்” ஒரு பொழுது போக்கு திரைப்படம்.