மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் FNS வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் நரசிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.தாமரை செல்வன் மற்றும் தெற்குதெருவை சேர்ந்த திரு.ராஜா உசைன் ஆகிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பவர் டில்லர்களை ஆய்வு செய்து, திட்டத்திற்கு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் குறித்தும் பவர் டில்லர் இயந்திரத்தின் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி மையத்தை ஆய்வு செய்து, பயிற்சியில் கலந்து கொண்டுள்ள இராமநாதபுரம் விவசாயிகளிடம் கலந்துரையாடி பயிற்சியின் பயன் குறித்து கேட்டறிந்தார். மேலும், விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்தும் நீர் மேலாண்மை முறைகள் குறித்தும் முறையாக பயிற்சி வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேடடறிந்தார். பயிற்சி மையக் கட்டிடங்களை ஆய்வு செய்து புதிய உணவகம் அமைத்திட கருத்துரு சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கழிப்பிடக் கட்டிடம் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பிட அறிவுறுத்தினார். தொடர்ந்து, உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடைபெறும் சூடோமோனஸ், விரிடி மற்றும் முட்டை ஒட்டுண்ணி உற்பத்தி முறைகளை ஆய்வு செய்தார்.
மேலும், விநாயகபுரத்தில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாநில விதை பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள துவரை (LRG-52) விதைப்பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளின் விதை தேவையை அறிந்து அதற்கேற்றார்போல விதை உற்பத்தி செய்து இருப்பில் போதிய அளவு விதைகளை வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விநாயகபுரத்தில் அமைந்துள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை ஆய்வு செய்து, மின்னனு தேசிய வேளாண் சந்தையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு நெல் உட்பட தானியங்களை சேமித்து வைக்கும் நாட்கள் 180 வரைதான் என்பது எதனால் பின்பற்றப்படுகிறது என கேட்டறிந்தார். வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு சட்டம் 1987-ன் படி 180 நாட்கள் வரை விளைபொருளை சேமித்து வைக்கவும் அதற்குமேல் சேமிக்க வேண்டுமெனில் வெளியே எடுத்து மீண்டும் புதிதாக வைத்துக்கொள்ள ஏதுவாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) விளக்கமளித்தார். பின்னர் பண்ணை வாயில் வர்த்தகம் மற்றும் பொது ஒருங்கிணைப்பு மையம் குறித்தும், சாக்குகள் எண்ணிக்கை, இயற்கைமுறை நெல் சாகுபடி, பரப்பளவு, தென்னை பரப்பளவு உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளாண் விற்பனைக்குழு மையத்தை ஆய்வு செய்து, விவசாயப் பெருமக்களிடம் வேளாண் விற்பனைக்குழு மையத்தின் பயன்பாடு குறித்தும், எந்தெந்த வகைகளில் இந்த விற்பனைக்குழு மையம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், இ-நாம் திட்டத்தின் மூலம் விவசாய பெருமக்கள் தாங்கள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆலோசனை வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், சந்தையில் விலை கூடுதலாக கிடைக்கின்ற பொருட்களை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மேலூர் நகராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தையும், வளர் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையினையும் மற்றும் நகராட்சியில் உள்ள அறிவுசார் மையத்தையும் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) உட்பட மேலூர் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.