பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை ராணுவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஐந்து பயங்கரவாதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதாஸர் காதியான் காஸ், ஹாபிஸ் முகமது ஜமீல், முகமது யூசுப் அஸ்ஹர், காலித் (அபு ஆகாஷா), மற்றும் முகமது ஹசன் கான் ஆகியோரை இந்திய ராணுவம் கொன்றது.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முதாஸர் காதியான் காஸின் (இவர் முதாஸர், அபு ஜுண்டால் என்ற பெயர்களிலும் அறியப்பட்டார்) இறுதிச் சடங்கிற்கு ஜமாத்-உத்-தாவா அமைப்பின் முக்கியஸ்தரும், சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவருமான ஹாபிஸ் அப்துல் ரவூப் தலைமை தாங்கினார். இந்த இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கலந்து கொண்டார்.
கொல்லப்பட்ட ஹாபிஸ் முகமது ஜமீல், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அஸ்ஹரின் மூத்த சகோதரியின் கணவர் ஆவார். முகமது யூசுப் அஸ்ஹர், அஸ்ஹரின் இளைய சகோதரியின் கணவர். முகமது யூசுப் அஸ்ஹர் உஸ்தாத் ஜி, முகமது சலீம், கோசி சாஹப் போன்ற பெயர்களிலும் அறியப்பட்டார். காந்தஹார் விமான கடத்தல் வழக்கில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியும் இவர்தான்.
அபு ஆகாஷா என்று அறியப்படும் காலித், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன். ஜம்மு காஷ்மீரில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களிலும், ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்களை கடத்தியதிலும் இவனுக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஃபைசலாபாத்தில் நடந்த இவனது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரிகளும், ஃபைசலாபாத் துணை ஆணையரும் கலந்து கொண்டனர்.
கொல்லப்பட்ட முகமது ஹசன் கான், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் செயல்பாட்டு தளபதி முஃப்தி அஸ்கர் கான் காஷ்மீரியின் மகன் இவன். ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இவனுக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியா.
