மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். சோழவந்தான் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து சோழவந்தான் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி முள்ளி ப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி நாச்சிகுளம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

முக்கியமாக சோழவந்தான் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு போதிய பேருந்து வசதிகளும் மற்றும் பள்ளி முடிந்து தங்கள் வீடுகளுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் போது நிழற்குடைகளும் இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி முடிந்து தங்கள் வீடுகளுக்கு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
சோழவந்தான் நகரில் பேருந்து நிலையம் வட்ட பிள்ளையார் கோவில் மருது மகால் மாரியம்மன் கோவில் காமராஜர் சிலை ஆகிய ஐந்துக்கு மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில் எந்த ஒரு நிறுத்தத்திலும் பயணிகள் தங்குவதற்கோ மாணவ மாணவிகள் தங்குவதற்கோ நிழற்குடைகள் இல்லாதது பெரும் சிரமமாக இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் பேருந்து நிலையத்திற்கும் ஒரு சில பேருந்துகளே வந்து செல்வதால் பேருந்து நிலையத்தில் மாணவிகள் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
இன்று மாலை 4 மணி அளவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முடிந்து பேருந்துக்காக சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்த மாணவிகள் அப்போது பெய்த கன மழையால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த நிலையில் நிழற்குடை இல்லாமல் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தனியார் திருமண மஹால் போன்றவற்றில் ஆங்காங்கே 20 முதல் 50 மாணவிகள் மழைக்காக ஒதுங்கி இருந்தது வேதனையை ஏற்படுத்தியது.

மேலும் நீண்ட நேர தாமதத்திற்கு பின்பு பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே நேரத்தில் முந்தி அடித்துக் கொண்டு ஏறி சென்ற அவலமும் ஏற்பட்டது.
பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூடுதல் பேருந்துகளை இயக்கவோ நிழற்குடைகள் அமைக்கவோ எந்த ஒரு முயற்சியும் அரசு தரப்பில் எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் பொதுமக்கள் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் தினசரி இதுபோன்ற சிரமங்களை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)