மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் குடியிருப்பு மாடி பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றி அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு காளியம்மன் கோவில் அருகில் மின்கம்பம் போக்குவரத்து இடையூறாக பல மாதங்களாக உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் செல்லும் கனரக வாகனங்கள் மின்கம்பத்தில் உரசி செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை அடிக்கடி ஏற்படுகிறது. இரவு நேரங்களில் எதிரெதிர் வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று விலக முடியாமல் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதே போல் சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து சிஎஸ்ஐ சர்ச் வழியாக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்வதில் மின்கம்பம் இடையூறாக இருப்பதாக பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மின்கம்பத்தையும் மாற்றி அமைக்க இதுவரை மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மின்சார வாரியம் அருகிலேயே சப்பானி கோயில் தெரு செல்லும் பாதையில் மின்வயர்கள் குடியிருப்பு பகுதியில் மாடிகளில் தாழ்வாக செல்வதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. முன்னாள் சோழவந்தான் பேரூராட்சி தலைவரின் மகள் வீட்டின் மாடியில் உள்ள தாழ்வாக செல்லும்மின் வயர்களை மாற்றி அமைக்க கோரி பலமுறை மின்சார வாரியத்திற்கு தகவல் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றார்.

இதேபோல் சோழவந்தானின் முக்கியமான பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்கம்பங்களும் மின் வயர்களும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக தொடர் புகார்கள் பொதுமக்களால் கூறப்பட்டு வருகிறது. ஆகையால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் சமயங்களில் இது போன்ற மின்கம்பங்கள் மின் வயர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.